பதிவுகள்

  • www.wasimakrampage.blogspot.com - padihal@yahoo.com - padihal@gmail.com

அநுராதபுரம் மாவட்ட கலை இலக்கியப் பதிவுகள்

அநுராதபுரம் மாவட்ட கலை இலக்கியப் பதிவுகள் 
- கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா 
இலங்கையில் உள்ள இருபத்தைந்து மாவட்டங்களில் நிலப்பரப்பைப் பொறுத்தவரையில் பெரிய மாவட்டமான அநுராதபுரம் மாவட்டத்தில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் தொடர்பாக பேசப்படும் போது,  தற்போது இந்த மாவட்டத்தில் தமிழ் மொழி பேசப்படும் 110க்கு மேற்பட்ட கிராமங்களும் 63 முஸ்லிம் பாடசாலைகளும் 2 தமிழ்ப் பாடசாலைளுகம் உள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் ஆகும். இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை அண்மைய கணக்கெடுப்பின்படி 19.6 இலட்சமாகும். இதில் சுமார் 73ஆயிரம் பேர்கள் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழைத் தாய் மொழியாக கொண்டவர்களாவர். 
பேராசிரியர் உக்குபண்டா கருணானந்த அவர்கள் வலிசிங்க ஹரிச்சந்தர் பற்றி எழுதிய நூல் ஒன்றில் 1871 தொடக்கம் 1911 வரை அநுராதபுரத்தின் சனத்தொகையை இன, மத ரீதியாக காட்டியுள்ளார். அதன்படி, இக்கால பரப்பில் (1871 – 1911 வரை) தமிழர்கள் முதலாவதாகவும், சிங்களவர்கள் இரண்டாவதாகவும் முஸ்லிம்கள் சிறிய வித்தியாசத்துடன் 3ஆவதாகவும் காணப்படுகின்றனர். 
இது அநுராதபுரம் என்ற பிரதேசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாக இருக்கலாம். இந்த பரந்த மாவட்டத்தை பொறுத்தளவில் மற்றைய பிரதேசங்களிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு சாட்சியாக சில கிராமங்களில் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் பாடசாலைகள் இருப்பதை அத்தாட்சியாக கூறலாம். 
அநுராதபுரம் பழைய நகரில் 1940களில் இருந்து 1971ஆம் ஆண்டுவரை வாழ்ந்த இலக்கிய வித்தகர் அநு.வை. நாகராஜன் அவர்கள் மல்லிகையில் இப்பகுதி தமிழ் மக்களின் இருப்புத் தொடர்பாக எழுதியுள்ள ‘நாணலை வருடும் அலைகள்” என்ற கட்டுரையில் மிக ஆழமாக இவ்விடயம் பற்றி குறிப்பிட்டுள்ளார். 
வன்னி எல்லையில் இருக்கும் அநுராதபுரம் முன்னொரு காலத்தில் ஓர் இராசதானியாகவும் இராஜரட்டையின் தலைநகராகவும் விளங்கியது. தென்னிந்தியப் படையெடுப்பால் இந்நகர மக்கள் தென்திசைக்குப் புலம்பெயர்ந்தனர். அதனால் அதன் நீர் வளமும் நில வளமும் தூர்ந்தன. நாடு காடாயிற்று. இது முடி மன்னர் காலத்திற்குப் பின் வந்த வரலாறு. கால மாற்றத்தில் ஐரோப்பியரின் வருகையின் பின் குறிப்பாக, ஆங்கிலேயர் ஆட்சியின் போது வளங்குன்றி வரண்டுகிடந்த வன்னிப்பிரதேசம் புனருத்தாபனம் பெற முன்னுரிமை பெற்றது. அதன்பயனாக தூர்ந்த குளங்களும் நீர் அணைகளும் மீளப்புப் பெற்றன. காடுகள் அழிக்கப்பட்டன. பயனுறு களனிகளுடன் மக்கள் குடியமர்வுகளும் தோற்றுவிக்கப்பட்டன. அதேவேளை இம்மண்ணில் மறைந்திருந்த தொல்கலை, கலாசார சின்னங்கள் அகழ்ந்து ஆராய் வேண்டி தேவையும் ஏற்பட்டது. இப்பணிக்கு திரு. பெல் எனும் ஆங்கிலத் துறை மகனார் தொல்பொருள் ஆய்வுத் திணைக்கள அதிகாரியாக அநுராதபுரம் வந்து, அநுராதபுர நகரையும் அதன் சூழலையும் தன் ஆய்வுகளுக்கு உட்படுத்திக் கொண்டார். இவ்வேளைகளுக்கு கூலியாக்கள் தேவைப்பட்டனர். அதற்காக மலேரியா நுளம்பு மண்டிய அக்கால கட்டத்தில் வன்னிக் கிராமத்துச் சிங்களவர்களும் வடக்குக் கிழக்கு மாகாண தமிழரும் வந்தேறு குடிகளாயினர். தமிழரைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாராட்சித் தமிழர் தமது வியாபார நோக்கத்திலேயே இங்கு வந்திருந்தனர். காலகெதியில் இவர்களே இந்நகரின் சொத்து சுகம் உள்ளவர்களாக மாறினர். பழைய நகர் என இப்போது அழைக்கப்படும் அநுராதபுரத்துப் பழைய நகர்ப்பிரதேசம் ஒரு காலத்தில் குட்டி வடமாராட்சி என பெருமை பெற்றிருந்தது. அந்நாளில் இங்கு குடியேறிய தமிழர் சிங்கள மக்களோடும் ஏனைய இனங்களோடம் இணைந்து வாழ்ந்தனர். ஆயினும் தமக்கே உரித்தான கலை கலாசார பின்னணியை நழுவிடாதும் கல்விக் கேள்விகளை நழுவி விடாது வாழ்ந்தனர். 
மேற்சொல்லப்பட்ட குறிப்பானது தமிழர்கள் வாழ்வு பற்றி குறித்துக்காட்டப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் தொடர்பாக ரொபட் நொக்ஸ் தனது வராற்று நூலில் 1689ஆம் ஆண்டு வருகை தந்த போது மலபார் மக்களே அதிகமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். 1871 அளவில் 1870ஆம் ஆண்டு காலப்பகுதியில் திஸ்ஸ வௌ குளம், பொன்னாரங் குளம், குமிச்சங்குளம், ஆமன வௌ, நாச்சாதுவ, கலாவௌ போன்ற இடங்களில் நிரந்தரக் குடியிருப்புகளை விட்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டிய நிலை உண்டானமைக்குக்காரணம், குளங்களை ஆங்கிலேயர் புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய தேவையின் பொருட்டாகும். 
1882ஆம் ஆண்டுக்கு முன்னர் அநுராதபுரம் ராட்சியத்திற்கு உட்பட்ட பெருமளவு நிலப்பரப்பு முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததாக ஆய்வு முகாமையாளர் எம்.எம். அலிக்கான் ‘மறை(று)க்கப்படும் வரலாறு” என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அநுராதபுரம் முஹாந்தரமாக சின்னத்தம்பி பிச்சைத் தம்பி என்பவரே இருந்துள்ளார். இவர்கள் மன்னார் மாவட்டத்தின் முசலிப் பகுதியிலிருந்தும் வேறு பிரதேசங்களிலிருந்தும் யானை பிடித்தல், விவசாயம், வர்த்தகம் போன்ற நோக்கத்திற்காக இங்கு வந்து குடியேறியவர்களாவர். 
மேல் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இன, சமய சனத்தொகை புள்ளி விபரங்களின் அடிப்படையானது முன்பந்திகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள சாதனங்களின்படி, உண்டான குடிப்பரம்பலால் அமைந்ததாகும். 
அநுராதபுரம் நகரசபையின் முதலாவது தலைவராக 1933ஆம் ஆண்டு தொடக்கம் 1944ஆம் ஆண்டு வரை சட்டத்தரணி எஸ். நடராஜா அவர்களும் அதன்பின்னர் ஆர்.வி. கந்தசாமி அவர்களும் 1946 தொடக்கம்,  1952 வரை ஆறு வருடங்களும் மொத்தமாக 19 வருடங்களுக்கு மேல் நகரசபைத் தலைவர்களாக கடமையாற்றி உள்ளார்கள். ஏ.எல்.எம். ஹனிபா உபதலைவராகவும் காதர் சாயிபு செய்யது அஹமத் உறுப்பினராகவும் கடமை புரிந்துள்ளனர். 
மேற்சொல்லப்பட்ட பதிவுகள் அநுராதபுரம் மாவட்டத்தின் தலைநகராக இருந்த அநுராதபுரத்தின் தமிழ் முஸ்லிம் மக்களின் இருப்புத் தொடர்பாக குறித்துக்காட்டக் கூடிய பதிவாக உள்ளது. நூற்றுக்கணக்கான வருடகாலமாக அநுராதபுரம் பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த போதிலும் இவர்களின் வரலாறு முழுமையாக எங்கும் பதியப்படவில்லை. விழா மலர்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டுரைகளில் சில பதிவுகள் காணப்படுகின்றனர். பெரும்பான்மை இனவரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்றை திரிவுபடுத்தும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். இது மிக கவலைக்குரிய விடயமாகும். 
இந்த வகையில் கலை இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அநுராதபுரப்பிரதேச தமிழ் பேசும் மக்களின் இருப்பை பதிவதற்கு 10ஆண்டுகளமாக தொடர்ந்து இலக்கியத் தடத்தில் கால்பதித்து வரும் படிகளின் 10வது ஆண்டு மலரில் இடம்பெறும் இந்த ஆக்கம் குறிப்பிடத்தக்க ஒரு ஆவணப்பதிவாக, இங்கு நூற்றாண்டுகால இலக்கிய வரலாறு தொடர்பான தகவல்கள் மீள நோக்கப்பட்டு ஒரு பதிவாக பின்வருமாறு பதியப்படுகின்றது. எழுத்துத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலாக இக்கட்டுரை தொகுக்கப்படவில்லை. நூல்கள் மூலம், ஆக்கங்கள் மூலம் நம்பிக்கைக்குரியவர்கள்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் இக்குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. அநுராதபுரப்பிரதேச இலக்கியப்படைப்பாளிகள் என்ற தலைப்பில் இவர்கள் ஆவணம் ஆக்கப்படும் போது இதைவிட விரிவான விபரங்கள் சேர்க்கப்படலாம். 
எப்.எப். சப்ரினா கருத்தரங்கு ஒன்றுக்காக தொகுத்த 45 பக்க ஆய்வுக் கட்டுரை ஒன்றில் மேற்சொன்ன எழுத்தாளர்கள் தொடர்பான விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த ஆய்வுக்கட்டுரையில் எம்.முஹம்மது மீராலெப்பை ஆலிம்சாஹிபு, அ.லெ. உமருலெப்பை ஆலிம், ஏ.சி.முஹம்மது ஹனிபா (அன்புதாசன்), எம்.எஸ்.சாலிஹ் (வித்தகன்), எம்.எஸ்.ஹ_சைன், எம்.அமீர்சுல்தான் (இளந்தீரன்), அன்பு ஜவஹர்ஷா, ஏ.ஆர்.எம். பர்வீன் (நாச்சியாதீவு பர்வீன்), எஸ்.எச். சாஹிர், மௌலவி ஏ.பி. மௌஹ்மூத், ஏ.பி.எஸ். ஹமீட், கே.எம். அஹமட் கான், எஸ்.எம். உவைஸ். சரீப், ஏ.சி. ராவுத்தர் நெய்னாமுஹமட், எம்.எச்.எம். இப்ராஹிம் (புரட்சி இளைஞன்), எஸ்.எச். சாதிக்குள் ஜானா, எப். பாத்திமா சப்ரினா, அஹமட் எம். நசீர், எப். ராசிக் பரீட்ஹ், ஏ.பி.எம். ஹ_சைன், ஏ,எஸ். ஜஹன்னரா, (கெகிராவ ஸஹானா), என்.எம். சித்தீக், எம். றஹ்மதுல்லாஹ், எம். ஏ. றிஸ்வான் முஹமட், சாஹிரா சரீப்தீன், எம். ஆப்தீன், எம்.சீ. ரஸ்மீன், எஸ். சாஜஹான், சீ.எம். அமீன் (அன்பு அமீன்), ஏ.பி.எம். அன்சார், பி. நௌபர், மிஹிந்தலை பாரீஸ், எம்.சீ. நஜிமுதீன், எம். சஹ்ரின் அஹமட், எஸ். முசம்மில், ஆர். பாத்திமா நிஸ்ரின், எம்.எச். நூர்ஜஹான் பேகம், பிஸ்ருள் ஹாபி, ஐ. முஹமட் பௌமி, அப்துல் முனாப், எம்.எச்.ஏ. காசிம், ஏ.சி. தௌபீக், எஸ்.எம். அப்துல் ரஹீம், எம். காசிம், ஐ.எம். ஜமீல், எம்.எச். பாத்திமா பேகம்,  ஜன்சி கபூர், எம். ரீ. நாகூர் உம்மா, எஸ். ஆர். சித்தி ரிஜானா, பதுருன் நிசா இஸ்ஸத், எஸ்.எச். அபுல் ஹசன், ஏ.கே.ஏ. நிசா, எம். அபுதாலிப், ஆதம் அசீஸ், ஐ.எச். முபைனக், எம்.எஸ்.எம். பௌசி, காசிமுள் சித்திக்கா, சாஹிர் நிசாம்தீன், ஏ.ஆர்.எம். ரபியுதீன், எம்.சீ. சபூர்தீன், எஸ். சுபைதீன், எம். ரபியுதீன், எம்.ஏ. சுபுஹான், ஆர்.எம். தாரிக், ஏ.எம். ஜிப்ரி, எஸ்.ரீ. ஆரிப், ஏ. முஹாஜிரின், எம். முஹ்ருப், எம்.எம். ஜிப்ரி, எம்.எச். சுபஹான் (அபு நுஹா), எல். வஸீம் அக்ரம், எம். நிசாம், நேகம பஸான், அஜ்மிர்கான், எச்.எம். சப்ராஸ், எம். சியாத், லரீபா அபுபக்கர், யு.எம். நயீம், எஸ். சுஹாட், எம்.பி.எம். நௌபர், ஏ.எஸ். ஷர்மிலா, கே.எம். ஷபீக், றஸ்மிலா நிஹார் இவ்வாறான நீண்ட பட்டியலில் உள்ளவர்கள் கவிதை, சிறுகதை, நாடகம், அறிவுப்புத்துறை, ஊடகம் போன்ற பல்வேறு கலை இலக்கிய விடயங்களில் ஈடுபட்டு வந்தவர்களாவர், பெரும்பாலனவர்கள் சிறிது காலத்தின் பின் இலக்கியப் பணியிலிருந்து விலகினாலும் இவ்வாறான பதிவில் இவர்களின் பெயர்களையாவது குறிப்பிடுவது அவசியமானதாக இருக்கும். நீண்டகாலமாக எழுதிவருகின்றவர்களைப் பற்றியும் நூல்களை வெளியிட்டு வருகின்றவர்களைப் பற்றியும் கீழ்வரும் குறிப்புகளில் தகவல்கள் உள்ளன. இப்பதிவில் விடுபட்ட பழைய தகவல்களும், புதிய தகவல்களும் இப்பகுதி தமிழ் கலை இலக்கியவாதிகள் தொடர்பான முழுமையான தகவல்கள் சேர்க்கப்பட்டு நூலுருப் பெரும் போது, இந்தப்பணி பூரணமாகும் என எண்ணுகிறேன். இக்குறிப்புகள் தலைப்புக்கு ஏற்ப நாம் ஆராய முற்படும் போது இப்பாடசாலையில் பழம்பெரும் பாடசாலைகளாக தலை சிறந்து விளங்கிய புனித வளனார் கல்லூரி இப்பகுதி இலக்கிய வளர்ச்சியின் கால் கோளாக இருந்தமையை யாரும் மறுக்க முடியாது. பிற்காலத்தில் அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம், அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம் போன்றவையும் இக்கிரிகொள்ளாவ முஸ்லிம் மகாவித்தியாலயம், கஹடகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயம், நேகம முஸ்லிம் மகா வித்தியாலயம், ஆகிய பாடசாலைகள் இந்த வகையில் இலக்கிய முயற்சிகளுக்கு அத்திவாரம் இட்டுள்ளன. 
முஹமத்தியன் கொலிஜ் என்ற பெயரில் ஒட்டுள்ளப்பள்ளம் என்ற பகுதியில் முகாந்திரம் மொஹிதீன் தம்பி மரைக்காரின் பொருள் உதவியால்,  1900 - 1948 காலப்பகுதியில் வாழ்ந்த இப்பகுதியின் மூத்த வரகவியான முஹம்மது மீரா லெப்பை அரபு கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்த மூத்த கவிஞரின் மூன்று கவிதைத்தொகுதி தொடர்பாக தகவல்கள் உள்ளன. 1929ம் ஆண்டு சிக்கந்தர் மகத்துவக் கும்மி என்ற நூலும் 1938ஆம் ஆண்டு விதி - அறிவு - விளக்கம் நூலும் அச்சேறின. இக்கவிஞரால் 1935ஆம் ஆண்டு எழுதி முடிக்கப்பட்ட ‘அஹ்காமுத்தீன்” என்னும் தீன் நெறி நியமம் என்ற நூல் இன்னும் அச்சேறவில்லை. இதன் கையெழுத்துப் பிரதி இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவiரிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாக கொண்டு அநுராதபுரம் பள்ளி வாசலின் பேஷ் இமாமாக (கதீப்) கடமையாற்றி அ.லெ. உமரு லெப்பை  ஆலிம் சாயிபு அவர்களால் இயற்றப்பட்ட கைப்புட்சிசு மாலை என்ற கவிதை நூல் 1930ஆம் ஆண்டு அளவில் வெளியிடப்பட்டது. கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, இவைகளே ஆரம்பகால வெளியீடுகள் ஆகும். இத்துடன் பழைய நகர கதிரேசன் ஆலய முருகன் மீது பாடப்பெற்ற ‘ஊஞ்சற் பா” என்ற நூல் தொடர்பாக தகவல் ஒன்றும் உள்ளது. 
இன்றும் எம்மோடு 84 வயதிலும் இலக்கிய நிகழ்வுகளுக்கு வருகைதரும் அல்ஹாஜ் எம்.எஸ். ஹ_சைன் 1945 - 1948 காலப்பகுதியில் அநுராதபுரம் புனித வளனார் கல்லூரியின் கையெழுத்துச் சஞ்சிகையான ‘தமிழ் மணி” என்ற சஞ்சிகையை ஆசிரியராக இருந்து நடாத்தியுள்ளார். அநுராதபுரத்தை பிற்ப்பிடமாக கொண்டிராத போதும் 1950ஆம் ஆண்டு முற்பகுதியில் புகுந்தகமாக கொண்ட அப்துல் காதர் முஹம்மது ஹனிபா (அன்புதாசன்) என்ற எழுத்தாளர் இப்பகுதியில் வாழ்ந்த சில ஆண்டு காலத்தில் கவிதை, சிறுகதை, போன்ற இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். சுதந்திரன், வீரகேசரி, தமிழின்பம் ஆகிய சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. 
1951ஆம் ஆண்டு புனித வளனார் கல்லூரியின் மேல் வகுப்பு மாணவர்கள் சிலர் சேர்ந்து அமைத்த தமிழ் கழகம் நடாத்திய திருக்குறள் மகாநாடு பெரும் சிறப்பாக நடைபெற்றது. நீண்டகாலம் செயலாளராக மறைந்த அநு.வை. நாகராஜன் அவர்களும் தலைவராக மறைந்த அதிபர் ரோ. ஸ்ரனிஸ்லொஸ் அவர்களும் கடமையாற்றினர். 1958ஆம் ஆண்டளவில் இவர்கள் நடத்திக்காட்டிய நாடகம் தொடர்பான தகவல் ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது. இக்காலப்பகுதியில் மறைந்த எம். அமீர் சுல்தான் (இளந்தீரன்), பீ.ஏ.சி. ஆனந்தராசா ஆகியோரை ஆசிரியர்காளாக கொண்டு ‘இளைஞர் குரல்” என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது. 
மர்ஹ_ம் எம். அமீர் சுல்தான் (இளந்தீரன்) மட்டக்களப்பு, நாட்டார் பாடல்களை தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டு அது தொடர்பாக ஆக்கங்களை வெளியிட்டு வந்துள்ளார். 1959ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அநுராதபுரம் வாலிப முன்னேற்றக்கழகம் பிற்காலத்தில் பல கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டது. அத்தோடு 1960ஆம் ஆண்டு அநுராதபுரத்தின் முதல் அச்சு சஞ்சிகையான ‘அன்னை” என்ற மும்மாத இதழ் அநு.வை. நாகராஜனை ஆசிரியராக கொண்டு வெளியானது. இங்கு விதந்து குறிப்பிடப்படவேண்யவர் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்டு (25.05.1933) 1940களில் அநுராதபுரத்தை வசிப்பிடமாகவும் 1971வரை 31 ஆண்டுகள் வாழ்விடமாகவும் கொண்ட அமரர் (02.09.2012) இலக்கிய வித்தகர் அநு.வை. நாகராஜன் அவர்களாவர்.  அநுராதபுரத்தில் கல்விகற்று தொழில்பார்த்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் வரை, இவரது கலை, இலக்கிய முயற்சிகள் இப்பகுதி இளந்தளிர்களுக்கு நீர்பாய்ச்சியதாக இருந்தது. ஆன்மீகம், கல்வி, தொல்லியல், வரலாறு, மொழி, இலக்கியம், சிறுவர் இலக்கியம் என பிற்காலத்தில் 16 நூற்களை வெளியிட்டு சாதனை படைத்த இவர் தனது பெயரின் முன்னால், ‘அநு”வைச் சுமந்திருப்பதால் தான் வளர்ந்து மலரத் தொடங்கிய மண்ணை இறுதிவரை மறக்காதிருந்தார் என்பதையிட்டு இப்பகுதி கலை, இலக்கியவாதிகள் பெருமை கொள்கின்றனர். சுகவீனமுற்றும் கூட, மேற்சொல்லப்பட்ட கலை இலக்கிய வடிவங்களை மறக்காது தொண்டாற்றியமையால் இலக்கிய வித்தகர் உட்பட பல்வேறு பட்டங்களும் விருதுகளும் இவருக்கு கிடைத்தன. இவரது நினைவாக இவரது குடும்பத்தினர் ‘நாகராஜஜோதி” என்ற நூலை வெளியிட்டு மறைந்த பின்னும் மறையா நினைவொன்றை பதிவாகத் தந்துள்ளனர். 
பிற்காலத்தில் புலம்பெயர்ந்த, தமிழக எழுத்தாளராகிய ஜோவலன் வாஸ் அன்னை சஞ்சிகையின் துணையாசிரியராக இருந்தார். 1965ஆம் ஆண்டு புனித வளனார் கல்லூரியின் உயிரியல் பட்டதாரி ஆசிரியரான அன்டன் ஞானராஜா அவர்களால் மாணவர் குரல் சஞ்சிகை பொறுப்பாக நின்று வெளியிடப்பட்டது. 65ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட ஐந்தாண்டு காலப்பகுதியில் கையெழுத்துச் சஞ்சிகை முயற்சிகள் வேகமாக நடைபெற்று வந்தன. புதுமை ஒளி, தமிழ்ச் சுடர், கலைமதி, வீரத்தமிழன், பெட்டகம், செங்கொடி, அன்பன் போன்ற கையnழுத்துச் சஞ்சிகைகள் மாதா மாதம் வெளியிடப்பட்டு வந்தன. தமிழ்ச் சுடர் என்ற சஞ்சிகையின் 36வது இதழ் வவுனியா வல்லிபுரம் அச்சகத்துக்கு ஊடாக 1969ஆம் ஆண்டு அச்சுப்பிரதியானது. மேற்படி சஞ்சிகைள் பலவற்றில் இணையாசிரியராக சஞ்சிகைப்பணியில் ஈடுபட்ட அன்பு ஜவஹர்ஷா (தமிழ் வேந்தன்), புரட்சி இளைஞன் என்ற பெயரைக் கொண்டு எழுதி வந்த எம்.ஏ.எம். இப்ராஹிம் அவர்களோடு இணைந்து புத்தொளி என்ற பெயரில் இரண்டு இதழ்கள் வெளியிட்டனர். மேற்சொல்லப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகைகள் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்த பலர் இன்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்களே. இரா. வி. மூர்த்தி, இரா நாகராசன், சிவா தம்பையா, பேனா மனோகரன், ஆ.சி.ஞானம், ஹேமாமாலினி மெய்யழகன், க.குமாரசுவாமி, எஸ்.எச்.எம். சஹிர், எஸ். சேவியர் குலாஸ், இலங்கை மன்னன், அ.மிராண்டா, பெ. ஆறுமுகம் ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆகும். 
ஆசிரியரான இரா நாகராஜன்,  ‘ராவய” தமிழ்;ப்பதிப்பான ஆதவன் ஆசிரியர் பீடத்தில் கடமையாற்றிய ஆ.சி. ஞானம், அநுராதபுரத்தின் முதலாவது சட்டத்தரணியான எஸ்.எம்.எம். சஹிர் ஆகியோர் இன்று நம்மிடையே இல்லாமை வருந்தத்தக்க செய்தியே. 
இப்பிரதேசத்தைப்பிறப்பிடமாக கொண்டு கொழும்பில் வர்ததகத்தில் ஈடுபட்ட வித்தகன் என்ற புனைப்பெயரில் எழுதி வந்த எஸ்.எம்.சாலிஹ் அவரது சிருஷ்டி இலக்கிய வாசகர் வட்டத்தின் சார்பில் ‘பேரறிஞர் அன்னாவின் தேன்துளிகள்” என்று நூலைத் தொகுத்து வெளியிட்டள்ளார். 
1968ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இளம் எழுத்தாளர் சங்கம் இப்பகுதியில் பல இலக்கிய நகர்வுகளை நிகழ்த்தியது. அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் 1971இல் ஆரம்பிக்கபட்ட ‘இளம் தளிர்கள் இலக்கிய வட்டம்” பிறையொளி சஞ்சிகையைத் தொடர்ந்து கல்லச்சுப்பிரதியாகவும் அச்சுப்பிரதியாகவும் வெளியிட்டு வந்துள்ளது. அத்தோடு, இந்த இலக்கிய வட்டத்தால் இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், கவியரங்குள் போன்றன நிகழ்த்தப்பட்டன. 
அநுராதபுரம் இலக்கிய வரலாற்றில் இங்கு குறிப்பிடத்தக்க பணிகளை குறுகிய காலத்தில் அசுரப்பணிகள் ஆற்றிய அநுராதபுரம் கலைச்சங்கம் நூல்வெளியீடு, இலக்கிய சஞ்சிகை வெளியீடு, இலக்கிய கூட்டம், நாடகம் என்ற வகையில் 1972ஆம் ஆண்டு தொடக்கம் 1976ஆம் ஆண்டு வரை பல பணிகளை ஆற்றியுள்ளது. மா.வை. நித்தியானந்தன். க. குமாரசுவாமி ஆகியோரை தலைவராகவும் அன்பு ஜவஹர்ஷா, பேனா மனோகரன் அகியோரை செயலாளர்களாகவும் கொண்டு இயங்கிய நான்கு வருடகாலத்தில் தம்பு சிவா, தங்கரட்ணம், ஆ.சி. ஞானம், எம்.ஏ.எம். இப்றாஹிம், மாத்தளை பாலா. த. குமாரலிங்கம், இரா சுகுன சபேசன், பேனா அறுமுகம் (வரன்), மெய்யழகன், கெமாலினி மெய்யழகன் போன்றவர்களின் கூட்டு முயற்சியால் பின்வரும் இலக்கிய முயற்சிகள் செய்யப்பட்டன. இச்சங்கத்தின் ஆதரவில் களம் என்ற மூன்று மாத சஞ்சிகை 1972ஆம் ஆண்டு தொடக்கம் வெளியிடப்பட்டு வந்தது. இலங்கையின் முதன்முதலாக கவியரங்குக் கவிதைகளை கவியரங்கின் போது தொகுப்பாக வெளியிடும் முயற்சியாக அன்பு ஜவஹர்ஷா ‘சிதைந்து போகும் சிறப்புக்கள்”, என்ற தொகுதியையும் பேனா மனோகரனுடன் சேர்ந்து ‘புத்துலகம் படைப்போம்” தொகுதியையும் 1973ஆம் ஆண்டு வெளியிட்டார். இலங்கையில் பல பாகங்களில் வசிக்கும் புதுக்கவிதையாளர்கள் 44 பேரின் கவிதைகளைத் தொகுத்து ‘பொறிகள்” என்ற பெயரில் அன்பு ஜவஹர்ஷா வெளியிட்டார். இதுவும் இலங்கை புதுக்கவிதை வரலாற்றில் முதன் முயற்சியாகும். 1975ஆம் ஆண்டு, பல்வேறு சஞ்சிகைகளில் வெளியான அன்பு ஜவஹர்ஷாவின் புதுக்கவிதைகள் ‘கவிகளும் ஒட்டுண்ணிகளும்” என்ற பேரில் கலைச்சங்கத்தால் வெளியிடப்பட்டது. 1976ஆம் ஆண்டு, அநுராதபுரத்தைப் பிறப்பிடமாக கொண்டு தற்போது தமிழ்நாடு காவல்துறையில் உதவி காவல் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற பேனா மனோகரினின் புதுக்கவிதைகளைத் தொகுத்து ‘சுமைகள்” என்ற பெயரில் கலைச்சங்கம் வெளியிட்டது. 1970களின் பிற்பகுதியில் இடம்பெற்ற இனப்பிரச்சினைகளின் காரணமாக அநுராதபுரம் கலைச் சங்கத்தின் முயற்சிகளில் ஆர்வமாகப் பணியாற்றிய பலர் அநுராதபுரத்தைவிட்டு புலம்பெயர இச்சங்கத்தின் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்தன. 
இக்காலகட்டத்தில் விமர்சனம், அகவய சிந்தனைகள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்காக இயங்கிய தேன்துளி இலக்கிய வட்டம் பல பயனுள்ள நிகழ்வுகளை மாதா மாதம் நடத்தி வந்தது. அ. யேசுராசாவின் ‘தொலைவும் இருப்பும்”, செங்கை ஆழியானின் ‘வாடைக்காற்று” என்ற நாவல், வன்னியூர் கவிராயரின் ‘ஈழத்து காவிய தீபகம்’ என்ற சிறுகதை தொகுதி போன்ற நூல்கள் தொடர்பாக பல கலந்துரையாடல்களை இவ்வமைப்பு நடத்தியுள்ளது. 
1987ஆம் ஆண்டு எப்.ஆர். பரீட்ஹ் ‘அன்னை” என்ற பெயரில் சஞ்சிகையின் சில இதழ்களை வெளியிட்டார். பின்னார் இவரின் முயற்சியால் குடா நெலுபாவ அல் மதினா முஸ்லிம் வித்தியாலய வெளியீடாக அல் மதீனா என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இலக்கிய அமைப்பு ரீதியாக வெளியீடுகள் நடைபெறாத போதிலும் கல்வி நிறுவனங்கள் கலாசாலை சஞ்சிகைகள் தமது ஆண்டு மலர்களை வெளியிட்டு வந்தன. ஆசிரியர்களுக்காக நடாத்தப்பட்ட தொலைக்கல்வி நிறுவனம் ‘தொலைச்சுடர்” என்ற சஞ்சிகையை ஏ.சி. ஜன்சியை ஆசிரியராக கொண்டு வெளியிட்டது. கனேவல்பொல சமூக அபிவிருத்தி மன்றம் ‘விம்பம்” என்ற சஞ்சிகையையும் ‘விழிப்பு” என்ற மலரையும் வெளியிட்டது. தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த அநுராதபுரம் சாஹிரா மாகா வித்தியாலய சஞ்சிகையான ‘பிறையொளி”, விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய ஆண்டு வெளியிடான விவேகானந்தன், சிறிது காலம் வெளியிடப்பட்ட விவேகி, நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முழுமதி, அழகப் பெருமகம முஸ்லிம் வித்தியாலய சஞ்சிகை, அங்குநொச்சிய முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த சஞ்சிகையான ‘பிரபஞ்சம்” ஆகியற்றில் படைப்பிலக்கியம் நிறைய விடயங்கள் இடம்பெற்றுள்ளன. நாச்சியாதீவுப் பகுதியில் வெளியான ‘;நாச்சியாதீபம், தூரிகை” போன்ற கையnழுத்துச் சஞ்சிகைகளும் குறிப்பிடக் கூடியவைகளாகும். இவைகள் அனைத்தும் எமது பார்வைக்கு கிட்டியமையால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இவைகளை விட வேறு சஞ்சிகைகள், கையெழுத்துபிரதிகளாக வெளியிடப்பட்டிருக்கலாம். இலக்கிய விடயங்களை உள்ளடக்காது. பாடசாலை பாட உள்ளடக்கத்தைக் கொண்டு பாடநூல்கள் பல வெளியிடப்பட்டுள்ளன. இவைகள் கல்வி தொடர்பானவையால் இங்கு குறிப்பிடப்படவில்லை. 
1999ஆம் ஆண்டுக்குப்பின்னர் இப்பகுதியில் நூல், சஞ்சிகைகள் இலக்கிய முயற்சிகள் தொடர்பான அமைப்பு ரீதியிலும்  தனிப்பட்ட ரீதியிலும் வேகமான பல முயற்சிகளும் இடம்பெற்றன. இளம் எழுத்தாளர்களின் ஆர்வம் இங்கு அதிகமாக காணப்படுகின்றது. ஐ. றஹ்மத்துள்ளாவைத் தலைவராகவும், சாஹிரா சரீப்தீனை செயலாளராகவும், நாச்சியாதீவு பர்வீனை அமைப்பாளராகவும் கொண்டு இயங்கிய அநுராதபுரம் கலை இலக்கிய வட்டத்தால், எப்.ஆர். பரீட்ஹ், ஜன்சி கபூர் ஏ.பி.எம். அன்சார், எஸ். சாஜஹான் ஆகியோரை ஆசிரியர்களாகவும் கொண்டு ‘அநுராகம்” என்ற கலை இலக்கிய மும்மாத சஞ்சிகையின் 6 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.எஸ். ஷர்மிலா பேகத்தை ஆசிரியராகவும், எல். வஸீம் அக்ரத்தை உதவியாசிரியராகவும், எம்.சி. நஜிமுதீன், ஜே.எம். சமான், எம்.ஐ. பிர்னாஸ், எம். சஹரின் அஹமட் ஆகியோரை சஞ்சிகை குழுவாகவும் கொண்டு அநுராதபுரம் நட்சத்திர நற்பணி மன்றம் என்ற அமைப்பு படிகள் என்ற சஞ்சிகை வெளியிட்டது. இன்று எல்.வஸீம் அக்ரத்தை ஆசிரியராகவும், எம்.சீ. நஜிமுதீனை உதவி ஆசிரியராகவும் கொண்டு அநுராதபுரம் நண்பர்கள் இலக்கிய குழு வெளியீடாக படிகள் சஞ்சிகையை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்றது. படிகள் சஞ்சிகையே இப்பகுதியில் இன்று தொடர்ந்து வெளியிடப்படுகின்ற ஆர்வமுள்ள இலக்கிய முயற்சியின் வெளிப்பாடாக குறிப்பிடலாம். இப்பிரதேச எழுத்தாளர் ஆக்கங்களோடு, வேறு பிரதேச பிரபல எழுத்தாளர்களின் ஆக்கங்களுடனும் சிறப்பான மறுபிரசுரங்களுடனும் இச்சஞ்சிகை வெளியிடப்பட்டுவருகின்றது.  ஒவ்வொரு சஞ்சிகையிலும் இலங்கையில் உள்ள பிரபலமான கலை, இலக்கிய வரலாற்று ஆய்வாரளின் நேர்காணல்கள் இடம்பெற்று படிகள் சஞ்சிகைக்கு கனதியைச் சேர்த்து வருகின்றன. அநுராகம், படிகள் போன்ற சஞ்சிகைகள் வெளிவந்த காலத்தில் ஏ.பி.எம். அன்சாரை அசிரியராக கொண்டு கஹடகஸ்திகிலிய பிரதேசத்திலிருந்து ‘தாகம்’; என்ற சஞ்சிகையும், ஆர்.எம். தாரிக் அவர்களை ஆசிரியராக கொண்டு அநுராதபுரத்திலிருந்து தூறல் என்ற சஞ்சிகையும் வெளிவந்தது. அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய மாணவ விடுதி வெளியீடாக ‘பார்” ‘தென்றல்” ஆகிய சஞ்சிகைள் வெளிவந்துள்ளன. 2013ஆம் ஆண்டு எம்.சீ. சபூர்தீன், நேகம பஸான், ஆகியோரை ஆசிரியர்களாக கொண்டு ‘அநுராதபுரம் மாவட்ட அடையாளம்” என்ற பெயரில் கல்வித் துறைத் தொடர்பான தகவல்கள், பாடசாலைச் செய்திகள் போன்றன இடம்பெற்று வருகின்றன. 
அநுராதபுரம் மாவட்ட இலக்கிய வளர்ச்சி பற்றிப் பேசும் போது, மறக்கவும் மறைக்கவும் முடியாத இரண்டு சகோதரிகள் இருக்கின்றார்கள். கடந்த 25வருட காலமாக கெகிராவ ஸஹானா, கெக்கிராவ ஸ_லைஹா ஆகியோரின் பங்களிப்பும் நூல் வெளியீடுகளும் விதந்துரைக்கத்தக்கவை. சித்தி ஜஹானரா என்ற இயற்பெயர் கொண்ட கெக்கிராவ ஸஹானா 1980ஆம் ஆண்டுகளில் வானொலி மூலம் எழுதத் தொடங்கினார். 1989ஆம் ஆண்டு மல்லிகையில் வெளியான இவரது முதல் சிறுகதைக்கு தகவம் பரிசு கிடைத்தது. அநுராதபுரம் மாவட்டத்தின் முதலாவது சிறுகதைத் தொகுதி என்று குறிப்பிடத்தக்க பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாழ்த்துரையோடு வெளியான ‘ஒரு தேவதைக் கனவு” என்ற சிறுகதைத் தொகுதி 1996ஆம் ஆண்டு வெளியானது. அடுத்து 2002ஆம் அண்டு கவிஞர் வைரமுத்துவின் அணிந்துரையோடு ‘இன்றைய வண்ணத்துப் பூச்சிகள்” என்ற கவிதைத் தொகுதி வெளியானது. 2009ஆம் ஆண்டு ‘ஒரு கூடும் இரு முட்டைகளும்” என்ற குறு நாவல் இவரால் வெளியிடப்பட்டது. ஜெயகாந்தன் என்ற எழுத்துலக ஜம்பவான் பற்றி அவருடைய படைப்புக்கள் தொடர்பான ஆய்வு வித்தியாசமான கோணத்தில் ‘சூழ ஓடும் நதி” என்ற பெயரில் வெளியானது. 2011ஆம் ஆண்டு ‘இருட்தேர்” என்ற கவிதைத் தொகுதியும் ‘மானசஞ்சாரம்” என்ற சுயவரலாறும் வெளியிடப்பட்டது. 2012ஆம் ஆண்டு ‘முடிவில் தொடங்கும் கதைகள்” சிறுகதைத் தொகுதி வெளியானது. இவருக்கு கிடைத்த பரிசுகளும் பாராட்டுகளும் பல உள்ளன. 
ஸ_லைஹா பேகம் என்ற இயற்பெயர் கொண்ட கெக்கிராவ ஸ_லைஹா 1980ஆம் ஆண்டு எழுத்துலகில் பிரவேசித்தார். ஆங்கில ஆசிரியையான இவரது இலக்கிய முயற்சிகள் பெரும்பாலும் நல்ல படைப்புக்களைத் தேடி மொழியெர்த்து தமிழில் தருவதாகவே இருந்தது. 2009ஆம் ஆண்டு ‘பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும்” என்ற இவரது முதலாவது மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி வெளியானது. இதற்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய மண்டலப்பரிசு கிடைத்தது இங்கு குறிப்பிடத்தக்கவிடயமாகும். இம்மாவட்டத்தில் இருந்து சாஹித்திய மண்டலப்பரிசு பெற்ற முதலாவது எழுத்தாளர் இவராவர். 2010ஆம் ஆண்டு ‘அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு” என்ற முதலாவது மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல் வெளியானது. 2011ஆம் ஆண்டு ‘இந்த நிலம் எனது” என்ற மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி பிரசுரிக்கப்பட்டது. இவரால் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள் ‘வானம்பாடியும் ரோஜாவும்” என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. 
அண்மைக்கால அநுராதபுரம் இலக்கிய வெளியீடுகளுக்கு கணனி அடிநாதமாக இயங்கிவந்த எம்.ஏ.எம். டில்சானை தலைவராக கொண்டு இயங்கி வந்த ‘ப்ரிஸ்ம்;” என்ற சமூக அபிவிருத்தி அமைப்பு ப்ரிசும் என்ற கல்விச் சஞ்சிகைய வெளியிட்டுள்ளதோடு, நாச்சியாதீவு பர்வீன் கவிதைகளை ‘சிரட்டையும் மண்ணும்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. நாச்சியாதீவு பர்வீனின் (இலக்கியம் மற்றும் இலக்கிய சாராத)  மல்லிகையில் வெளிவந்த கட்டுரைகள் ‘பேனாவால் பேசுகிறேன்” என்ற தலைப்பில் மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்ததுடன், இவரின் ‘மனவெளியின் பிரதி” என்ற கவிதைத் தொகுதி கொடகே வெளியீடாக வெளிவந்துள்ளது. மறைந்த பல்துறைக் கலைஞர் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களின் நினைவுக் கவிதைகளை ‘புதுப்புனல்” என்ற பெயரில் நாச்சியாதீவு பர்வீன், திருமதி பஸ்மினா அன்சார் ரிபாக்குடன் சேர்ந்து தொகுத்து சிந்தனை வட்டத்தின் 150 ஆவது வெளியீடாக வெளியிடப்பட்டது. பல்வேறு இலக்கிய கௌரவங்களையும் ஈட்டியுள்ளார். 
படிகள் (பதிப்பகம்) சஞ்சிகை, ‘வேலிகளைத் தாண்டும் வேர்கள்” என்ற அநுராதபுரம் தமிழ்க் கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டது. இதன் தொகுப்பாசிரியர்களாக நாச்சியாதீவு பர்வீன், எல். வஸீம் அக்ரம் ஆகியோர் இருந்தனர். இத்தொகுதியில் அன்பு ஜவஹர்ஷா, பேனா மனோகரன், கெக்கிராவ ஸஹானா, நாச்சியாதீவு பர்வீன், கெக்கிராவ ஸ_லைஹா, எம்.சி.ரஸ்மின், அநுராதபுரம் ரஹ்மதுள்ளா, எல். வஸீம் அக்ரம், அநுராதபுரம் சமான் ஆகியோர்களின் கவிதைகள்  தொகுக்கப்பட்டிருந்தது. அண்மையில் மிஹிந்தலை ஏ. பாரிஸின் சடலத்தின் வேண்டுதல் என்ற கவிதைத் தொகுதி படிகள் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. 
ஜீவநதி வெளியீடாக வெளிவந்த யாழ், மன்னார், அநுராதபுரம் ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்த் கவிஞர்களின் கவிதைத் தொகுதியில் கெகிறாவ ஸஹானா, கெகிறாவ ஸ_லைஹா, நாச்சியாதீவு பர்வீன், ஜன்சி கபூர், மிப்ராஸ் இஸ்மாயில், ரிஸ்னா ரசீன், நிசாம் பாருக், வஸீம் அக்ரம், சஹ்ரின் அஹமட், நேகம பஸான் ஆகிய அநுராதபுரத்தைச் சேர்ந்த பத்து கவிஞர்களின் 20கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தொகுதியின் தொகுப்பாசிரியர்களுள் நாச்சியாதீவு பர்வீனும் ஒருவராவார்.
மல்லிகையின் 330வது வெளியீடாக 2006ஆம் ஆண்டு அநுராதபுரம் பிரதேச சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. இது அநுராதபுர மாவட்ட கலை இலக்கியப் படைப்பாளிகளுக்கும் பிரதேச இலக்கியத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளத்தை வழங்கியிருந்தது. 
நேகம பிஸ்ரினின் ஊடகம் சார்ந்த நூல் ஒன்று வெளிவந்துள்ளது. முக்கிரியாவ எம்.எம். ரசீம் தனது பட்டப்படிப்பிற்காக செய்த ஆய்வில் 1990களின் பின்னர் அநுராதபுர மாவட்ட இலக்கிய நகர்வுகள் என்ற கட்டுரையில் சில பகுதிகள் படிகள் சஞ்சிகையில் தொடராக வெளியிடப் பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற பிரதேச இலக்கிய ஆய்வரங்கில் ‘வடமேல் வடமத்திய மாகாண இலக்கியங்கள்”என்ற தலைப்பில் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் ஆற்றிய ஆய்வுரை இப்பிரதேச இலக்கிய முயற்சிகளுக்கு சிறந்த அங்கீகாரமாகவும், ஊன்றுகோலாகவும் இருந்தமை இங்கு குறித்துக்காட்டத் தக்கதாகும். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இப்பகுதியில் நடைபெற்றுவரும் இலக்கிய முயற்சிகள் தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வாளரால் ஆவணமாக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இதனைக் குறிப்பிடலாம். 
இந்த மண்ணின் பின்தங்கிய கிராமம் ஒன்றை மையமாக கொண்டு மல்லிகைப்பந்தல் வெளியிடாக வெளியிவந்துள்ள ஒரு காலத்தில் இப்பிரதேசத்தில் ஆசிரியராக கடiமாயற்றிய ப.ஆப்தீன் எழுதிய ‘கருக்கொண்ட மேகங்கள்” என்ற நாவல் இப்பிரதேசத்தின் முதல் நாவலாக உரிமை கொண்டாடுவதில் தவறு இருக்க முடியாது என்று எண்ணுகிறேன். 
இப்பிரதேச கலை இலக்கியவாதிகளில்  மிகவும் குறிப்பிடத்தக்கவரான ஹொரவப்பத்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த எம். சீ. ரஸ்மின் ‘நாளையும் மற்றொருநாள்” (கவிதை - 2008), சின்னவனும் நண்பர்களும் (இளைஞர் நாவல் - 2008), முன்மாதிரி (இளைஞர் நாவல் - 2009), ஊரடங்குச் சட்டம் (சிறுகதை  - 2009) உள்ளிட்ட 8 நூல்களை சிங்கள மொழியிலிருந்து தந்துள்ளார். இவர் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளிநாடுகளில் இடம்பெற்ற சர்வதேச மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார். அபிவிருத்திக்கான ஒலிபரப்பு, வானொலி நாடகம், பன்மைத்துவத்திற்கான ஒலிபரப்பு, ஒலிபரப்பு மொழியியல் மற்றும் பால் நிலையும் ஒலிபரப்பும் ஆகிய துறைகளில் ஈடுபட்டுவருகின்றார். சமூகவானொலி - மனித வலுவாக்கத்திற்கான ஊடகம் (2012) என்ற ஆய்வு நூலையும், போர்க்கால சிங்கள இலக்கியங்கள் - ஓர் பன்மைத்தவ ஆய்வு என்ற நூலையும் அண்மையில் வெளியிட்டுள்ளார். ரஸ்மின் இதுவரை சுமார் 150ற்கும் அதிகமான நாடகங்களை எழுதியுள்ளார். எனவேதான் அப்படி (2008), ஜீவன் வந்து சேரும் வரை (2009), சொர்க்கமே என்றாலும் (2010), மௌனத்தின் புன்னகை (2011), யாவரும் கேளிர் (2012) ஆகிய தொடர் நாடகங்களையும் நாடகத் தொடர்களையும் தயாரித்து வழங்கியுள்ளார். வானொலி நாடகம் மற்றும் சமூக வலுவாக்கம் தொடர்பான சர்வதேசப் பயிற்சி நெறிகளில் வளவாளராகவும் பங்குபற்றி வருகின்றார். 
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அநுராதபுரம் பிரதேச இலக்கியத்திற்கும் விலாசத்திற்கும் தமிழ் இலக்கிய உலகில் ஆழமான பதிவொன்றை உண்டாக்கிவரும் படிகள் சஞ்சிகையின் ஆசிரியர் எல். வஸீம் அக்ரம் அவர்களின் இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒன்று ‘மண்ணில் துழாவும் மனது” அடுத்தது. ‘ஆக்கிரமிப்பின் கால் தடம்”. இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்தில் (2006 - 2009) தமிழ்ச் சங்க வெளியீடுகளான களவட்டி (ஆய்விதழ்), மரங்கொத்தி (கவிதை இதழ்) ஆகியவற்றின் இணையாசிரியராகவும் மாணவர் பேரவையின் செயலாளராக செயற்பட்ட காலங்களில் வெள்ளிச்சிறகு, எழுதுகோல் ஆகிய வெளியீடுகளின் ஆசிரியராகவும் கலை இலக்கியப் பங்காற்றியுள்ளார். 
படிகள் சஞ்சிகையின் உதவியாசிரியராக இருந்து வருகின்ற எம்.சி. நஜிமுதீன் 2010ஆம் ஆண்டு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சும் இளைஞர்கள் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்திய தேசிய இளைஞர்கள் நாடகப் போட்டியில் எம்.சி. நஜிமுதீன் தயாரித்த ‘கலைந்த கனவு” நாடகம் தேசிய ரீதியில் மூன்று விருதுகளைப் பெற்றுக் கொண்டது. குறித்த நாடகத்தின் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த எம்.சி. நஜிமுதீன் தேசிய ரீதியில் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுக் கொண்டார். 2011 ஆம் ஆண்டு இதே அமைச்சின் கீழ் நடந்த தேசிய போட்டியில் எம்.சி. நஜிமுதீன் தயாரித்த ‘சலோமி” என்ற நாடகம் ஏழு விருதுகளைப் பெற்றுக் கொண்டது. அத்துடன் குறித்த நாடகம் இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையில் வடக்குக் கிழக்கு உட்பட பதினொரு மாவட்டங்களில் மூப்பதுக்கு மேற்பட்ட இடங்களில் மேடையேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த ஆண்டில் கலாசார கலை அலுவல்கள் அமைச்சு கலாசார திணைக்களம், இளங்கை கலை கழகத்தின் நாடக குழு என்பன இணைந்து நடத்திய அரச நாடக விழாவில் மூன்று விருதுகளைப் பெற்றுக் கொண்;டமையும் குறிப்பிடத்தகக்கது. 2012ஆம் ஆண்டு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சும் இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்திய தேசிய இளைஞர் நாடகப் போட்டியில் எம்.சி. நஜிமுதீன் தயாரித்தளித்த ‘அவன் போட்ட கணக்கு”நாடகம் ஒன்பது விருதுகளைப் பெற்றுக் கொண்டது. அந்த நாடகத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்த எம்.சி. நஜிமுதீன் நடிகருக்கான ஜூரர் சபை விருது பெற்றதுடன் சிறந்த இயக்குனருக்குமான விருதையும் பெற்றுக் கொண்டார். 2011ஆம் ஆண்டு நடந்த இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு நடாத்திய சிறுகதைப் போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடமும் அதே ஆண்டு கலாசார அலுவல்கள் அமைச்சு நடாத்திய சிறுகதைப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடமும் 2012ஆம் ஆண்டு தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் நடாத்திய ‘வியர்வையின் ஓவியம்” சிறுகதைப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடமும் 2013 வடலி அமைப்பு தினக்குரலுடன் இணைந்து நடாத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசும் பெற்றுள்ளார். அவ்வாறே 2012ஆம் ஆண்டு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு நடாத்திய அறிவிப்பு போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார். 
இங்கு பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்த தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த பின்னர், இம்மாவட்டத்தில் உள்ள 64 முஸ்லிம், தமிழ் பாடசாலைகள் திமிழ் தின விழாக்கள், கல்லூரி வெளியீடுகள் போன்றவற்றின் ஊடாக இலக்கிய நிகழ்வுகள் தொடர்கின்றன. 
2014.09.01 

படிகள் 31 - ஆளுமை

அகவை 75ல் தேசத்தின் கண் மானா மகீன் - கலைச் செல்வன்


வரலாறு என்பது விண்மீன்களுக்கான வெளிச்சம் அல்ல.
விடியல்களுக்கான வெளிச்சப்பிழம்புகள், இது வெறும் விளம்பரம் அல்ல. துலாம்பரம் - துலாபாரம் ஆற்றலின் அறுவடை ஆளுமைக்கான பொற்குடை! சுவடுகள் பதித்த சூரியனின் சரித்திரம். கண்டெடுத்த புதையலின் சூத்திரம். இங்கே உங்கள் விழிமேய்ச்சலுக்காக என் நினைவுக் கேமிராவினால் படம் பிடித்திருப்பது வரலாற்றில் வாழும் என் காதலுக்குரிய கதாநாயகனைத்தான்.

அந்த நாயகன் யார் தெரியுமா?
சமத்காரங்களினால் சாதனைப் படைக்கும் தமிழ்மணி மானா மக்கீன் தான். இவருக்கு கிடைத்த அரச சாஹித்திய உயர்விருது 'தேசத்தின் கண்;' இதனால் பலருக்கு தேகத்தில் புண். இந்த அமானுஷ்ய புத்திரனால் இலக்கியபூமிக்கும் புரவலர்கள் பலர் அறிமுகம். அதனால் பழைய புதிய படைப்பாளிகளுக்கும் ஏறுமுகம். எனக்கும் கலைத்துறைக்கும் உள்ள தொடர்பும், எனக்கும் 'எம்திரி'க்கும் உள்ள உறவும் அரைநூற்றாண்டுக்கும் மேல், அது ஆலம்விழுதுகள் போல் அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் கறுப்புக்கண்ணாடிக் காரரின் 'கல்கண்டு' இவர் கண்களைத் தழுவாதிருந்தால்...

அப்பொழுது பட்டித் தொட்டியங்கும் பட்டொளி வீசிய 'ரெடிபியூசன்' என்ற வானொலிப் பெட்டியில் ஒலிபரப்பான 'சிறுவர் மலர்' இந்த இளவயசுக்காரரின் இதயத்தில் இடம் பிடிக்காதிருந்தால்... எம்.எம்.மக்கீன் என்ற மானா மக்கீனை கலை யுலகம் காணாது போயிருக்கும். இலக்கியத்துறையும் இதயமற்ற இயந்திரமாயிருக்கும். ஊடகங்களுக் குள்ளும் ஊட்டச்சத்து குறைந்து போயிருக்கும் அன்றைய பதினொரு வயதுக்கார சிறுவன் தான், இன்று ஆற்ற சபையில் நூற்றொருவராக அகவை எழுபத்தைந்தைக் கொண்ட இளைஞனாகத் திகழும் எங்கள் தமிழ்மணி. ஆற்றல் வயலின் அற்புத விளைச்சலான நெல்மணி.

அதனாலன்றோ...
திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் தமிழகப் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களால் வழங்கப்பட்ட 'ஆய்வுத் தமிழ் ஆற்றுநர்' எனும் கௌரவம். ஒரு காலத்தில், நான் ஒரு இலக்கியக்காரனாக வரவேண்டும் என்பது மானாவின் அவா. மானா ஒரு கலைஞனாக திகழவேண்டும் என்பது என்னுடைய ஆசை. காலம் வேறுவிதமாக தீர்மானித்தது. பொன் விழாவையும் கடந்த இலக்கிய வாதியாக அவர் கலைஞனாக நான். என் பிள்ளைத் தமிழக்கு முதல் தொட்டிலைக்கட்டியவராக மானா, அவரது நாடக கேள்விகளுக்கு கரம் கொடுத்த கொடிமரமாக நான், இதுவே எங்களுக்குள் இருக்கும் ஆழம் காண முடியாததோர் ஆத்மதிருப்தி. இன்னொரு வகையில் பதியம் போட்டால் இது தான் எங்கள் இருவரினதும் ஆத்மபலம். இருக்க முடியும்?

அத்தோடு விட்டாரா இந்த அஷகாய சூரர் ?
சிங்கள நாடகத்துறையின் வளர்ச் சிக்குக் காரணமான முன்னோடி களில் ஒருவரான தயானந்த குணரத்ன இயக்கி அரச நாடக விழாவில் விருதுகள் பெற்ற 'இபிகட்ட' (ஆமை ஓடு) எனும் பிரபலமான நாடகத்தை 'கிளாரிகல் கிளாஸ்த்ரி' எனும் பெயரில் தமிழக்குத் தந்தார் 'எம்த்ரி' வெள்ளவத்தையில் அந்நாளில் இருந்த விமலா உதயனன் புரொடக் சன்ஸ் என்ற நாடக அமைப்பினரே இந்நாடகத்தை தயாரித்து இருந்தார் கள். தமிழ் - சிங்கள  முஸ்லிம் கலையுணர்வுக்கும், புரிந்துணர் வுக்கும் நாடகத்தின் மூலம் பாலம் அமைத்த இவரை பிறைநிலாவாகப் பார்க்கவில்லை. இவரை ஒரு பூரணச் சந்திரனாகவே புரிந்து கொள்கிறேன்.

இதன் பின்னும் தேசிய தமிழ் நாடக விழாவில், காலஞ்சென்ற நாடக ஆசிரியர் எம்.எச்.பௌசுல் அமீரின் 'தேட்டத்துராணி' இவரது இயக்கத்தில் அரங்கேறியதோடு, சிங்கள மேடையில் 'பல்கீஸ் நோனா' வாகவும் வரச்செய்தார். கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் ஆனந்தா புரொடக்ஷன்ஸ் நாடு பூராகவும் அரங்கேற்றிய தாலிக் கொடி நாடகத்தின் இயக்குனரும் இவரேயாவார்.

இப்படி ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் சிங்களத்திற்கும், சிங்களத்தில் இருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து சிங்களத்திற்கும் நாடகங்களை கொண்டு சென்றதன் மூலம் அர்த்தமுள்ள நாடக அரங் கை அகலப்படுத்தி இருக்கிறார். மூலையிலே முடங்கிக் கிடந்த கலைஞர்களுக்கு மூளைச் சலவை  செய்திருக்கிறார். தினகரன் தமிழ் நாடக விழா  1969இல் ஆறு விருதுகளை வென்ற எனது 'மனித தர்மம்' நாடகத்தில் ஒளி அமைப் பாளராகவும், சிகரம் தொட்ட என் நாடக முயற்சிகளுக்கு வழிசமைத்த வராகவும் எனக்குத் துணைநின்ற மானாவை எப் போதும் நான் நினைப்பதுண்டு. வந்த வழி மறந்தவர்களுக்கு வரலாற்றில் ஏது இடம் ?

கலைத்துறையில் மானாவின் பயணம் 15 ஆண்டுகள்தான். ஆனால் அவை பயனுள்ள ஆண்டுகள். குறைவான காலங்களில் நிறைவான சாதனைகள் அவர் உடையது. 'முது கலைஞர்' விருதிற்கு அது மட்டுமே போது மானது (முகமும் முகவரியும் இல்லாமல் முது கலைஞர்களாக தங்களை வரித்துக் கொண்டுள்ள வர்கள் முழுமனதோடு என்னை மன்னிப்பார்களாக )

அப்பொழுதெல்லாம் அவர் 'மானாவாக' பரிணமிக்க வில்லை. அனைத்திலும் எம்.எம்.மக்கீன் என்றுதான் பரிமாணமளித்தார் என் பதையும் நாம் மறந்து விட முடியாது. கலைத்துறையைவிட்டு இலக்கியத் துறையில் அவர் பயணித்ததால் தான் கடல் கடந்த நாடுகளில் எல்லாம் அவர் புகழ் துவங்கியது. புலமைத் துலங்கியது. அவரது வசிய வார்த் தைகள் பூக்களைக் கூட பூப்படையச் செய்யும்.

மானாவின் பல பரிமாணங்களை காகிதத் தட்டுப்பாடு கருதி இடை நிறுத்தம் செய்தாலும் இரண்டு விஷயங்களை சொல்லித்தான் ஆக வேண்டும். ஓன்று மேடை பங்களிப்புகளுக்கு மத்தியில் 'நிலா' என்ற சிற்றிதழை ஓராண்டு காலம் மாதம் இரு முறையாக நடத்தியது. அந்த அதிசயம் இன்றும் என்னை வியக்க வைக்கிறது.
இருண்டாவது... பத்தி எழுத்துக் களுடன் பலதரப்பட்ட பழரசத் தகவல்களுடன் ஒரு முழுப்பக்க மாகத் தொடர்ந்து நான்காண்டு களாக 'லைட்ரீடிங்' தினகரனில் பிரசுமானது. இந்த விசித்திரம் இப்போது வியர்க்கவைக்கிறது.  

நான் 'நிலா' வை ரசித்தவன். 'லைட்ரீடிங்'கை ருசித்தவன் இரண்டும் நின்று போனது காலத் தின் விதியா? கருத்துக் குருடர்களின் சதியா? இறைவனே அறிவான் எனினும் நதியை குளத்தினுள் மூழ்கடிக்க முடியவில்லை.

தமிழ்மணி ஒரு நதி. அதுவும் மகாநதி. எது நடந்தாலும் எப்படி நடந்தாலும் எட்டுத்திசையும் மானாவுக்கு வெற்றி திசைதான்.

நம் கைரேகைகளில் நமது சரித்திரம் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அது உண்மையோ, பொய்யோ? ஆனால் இவரது விரல்களுக்கு ஒரு சரித்திரம் உண்டு. காரணம்? சூரியச் சொற்களால் சாறு பிழியும் வித்தையை இவர் விரல்கள் கற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை உறுதிப்படுத்துகிறது ஐந்தாண்டு களுக்கு முன்னர், எழுபதாம் அகவை விழாவின் போது இளை யான்குடியிலிருந்து பொற்கிழி கவிஞர் மு.சண்முகம் எழுதிய கந்தகவரிகள்.

ஈழம் தந்த வேழம்-அந்த
ஈர மண்ணின்
புன்னகைக்கும் சோளம்
எழுபது வயதான
நிலவு - இவர்
எல்லாத் தமிழருக்கும்
உறவு

இந்த உறவு நிலைக்க, இலக்கிய உறவு தழைக்க அகவை 75 இல் தடம் பதிக்கும் 'மானா' மக்கீன் அவர்கள், இன்ஷா அல்லாஹ் இன்னும் 75 ஆண்டுகள் வாழ்க வளமுடன் வல்ல நாயகன் அருளுடன். எனக்குள் எப்போ திருந்தோ ஓர் ஆசை, எனது உணர்வுத் தூரிகையால் மங்காத வர்ணங்களினால் ஓசையில்லா ஓசையின் ஓவியத்தை தீட்ட வேண்டும் என்பது. அந்த ஓவியத் தைத்தான் உங்கள் பார்வைக்குப் பதியம் போட்டு இருக்கிறேன் இன்று.

என்னை இயக்கும் இறைவனுக்கே எல்லாப் புகழும்.

படிகள் 31 - ஆளுமை

சிங்கள சினிமாவில் அசோக்க ஹந்தமக - எல். வஸீம் அக்ரம்

ஒளி ஊடகத்தை தனது பிரதான ஆயுதமாக ஏற்றுக் கொண்ட ஆசோக்க ஹந்தகம, சினிமா உலகிற்கு அறிமுகம் தேவையில்லாத ஒரு இயக்குனர். கடந்த 20 வருடங்களாக சிங்களச் சினிமாச் சூழலில் தவிர்க்க முடியாதவர் மட்டுமின்றி அதிக சர்ச்சைகளுக்கும் கேள்விகளுக்குமுட்பட்டவர்.

1992ல் இவரது முதலாவது திரைப்படமான 'சந்த கிணர' (ஆழழn டுயனல) தயாராகிக் கொண்டிருந்தது. அந்த திரைப்படம் அந்தந்த ஆண்டகளில் வெளியாகிக் கொண்டிருந்த ஏனைய திரைப்படங்களின் ஆக்கிரமிப்பினால் தனது இடத்தை அடைந்து கொள்ள முடியாமல் சுமார் ஆறு வருடகால இடைவெளிக்குப் பின் 1998ம் ஆண்டு வெளிவருகின்றது.

அதுவரை அசோக்க ஹந்தகமவை அவரது பல்கலைக்கழக மாணவ நண்பர்களைத் தவிர வேறு யாரும் இவரை ஒரு சினிமா சிருஷ்டி என்று அறிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை.

சந்த கிணர திரைப்படம் வெளிவந்து சில நாட்களுக்குள் ஹந்தகமவை முழுமையான, ஒரு ஒளி ஊடக செயற்பாட்டாளராக சர்வதேசமெங்கும் வரையறுத்துக் கொண்டனர். இவரை வெறுமனே உள்ள இயக்குனராக அன்றி சினிமாவில் குறிப்பாக மாற்றுச் சினிமாவில் முக்கிய ஒரு பிரதிநிதியாக உலகம் அடையாளம் கண்டு கொண்டது. சினிமாவுக்குள் தொடர்ச்சியாக கதையாடல்களுக்குட்பட்டு வருகின்ற அடையாளவாதம், யதார்த்த வாதம் போன்ற விடயங்களை தனது ஒளிப்டிமங்களால் குறிப்பாக சினிமாச்சித்திரங்ளாக நமது புலன்களுக்கு ஊடாக ஆகர்சிக்கின்ற பணியை ஹந்தகமவின் இந்த 20வருட கால வாழ்வு செயற்படுத்தியிருக்கின்றது.
சினிமா ஊடகத்தின் பொறுப்பை மிகவும் வலிமையாக பயன்படுத்தி அதன் பெறுபேறுகளை சமூகச் சிதைவுகளில், சமூகக் கட்டமைப் புகளில் ஒப்பிட்டுப் பார்க்கின்ற ஒரு போராட்டத்தை ஹந்தகமவின் சினிமா உலகு நிர்மானம் செய் துள்ளது. சினிமா என்ற ஒரு காட்சி ஊடகத்திலிருந்து அவர் தனது சமூகம் மீதான ஆழ்ந்த பிரக் ஞையை, கதையாடலை, இருப்பை மற்றும் எதிர்வு கூறலை சாத்திய மாக்க முடிந்துள்ளது.

சத்தியமாக ஹந்தகம சினிமா ஜாம்பவான் என்ற கீர்த்திக் கிரிடங் களால் முடிசூட்டப் பட்டாலும் அதே தளத்தில் அதிகப்படியான விமரிசனங்களுக்குள்ளும் விவாதங் களுக்குள்ளும் தாக்கங்களுக்குள்ளும் ஆட்பட்டிருக் கின்றார்.

சமூகத்தில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்துகின்ற சக்தி சினிமா என்ற கலைக்கு இருக்கின்றது. அதற்குள் கவிதை, இலக்கியம், சமூகம், நாகரீகம், ஓவியம், விமரிசனம், இசை, சமயம், விழிப்புணர்ச்சி, பாலியல், பொருளியல், அரசியல் என்ற எண்ணற்ற அணுப் பிரலயங்கள் கூடுகட்டியுள்ளன. இவ்வெண்ணக் கருக்கலின் ஒட்டுமொத்த வெடிப்பு சினிமா. சினிமாவின் ஒவ்வொரு அசைவு களிலும் எனது இருப்பைத் தேடுகிறேன். எனது சுயத்தை தேடுகிறேன் என்கிறார் திரு. ஹந்தகம.

நான் மக்களது வரம்புகளுக்குள் ஒரு சினிமாக்காரன் என்ற அடையாளத்தை பெற்ற போதும், நான் எவ்வகையான சினிமாக் காரன் என்ற வினா என்னை வாழ்நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கின்றது. சமூகத்தின் ஒரு புறக் கண்ணாடியைக் கொண்டு எனது நோக்கையும், எனது அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்துவது எனது உருவாக்கத்தின் பின்னணி ஆகும்.

இது உண்மையில் ஒரு விளையாட்டு.  சமூகத் தினுட னான விளையாட்டு, அரசிய லுடனான விளையாட்டு, இன் னொரு முறையில் சொல்வ தாயின் சமூகத்தின் அசைவுகளு டனான ஒரு யுத்தம் சினிமா வாகும். நான் சினிமா என்ற ஒரு நுண் கலையின் அல்லது ஒரு உயிரூட்டியின் தன்மைகளை அதன் சொரூ பங்களில் இருந்து தான் வெளிப்படுத்த துணிகிறேன். மாறாக சடவாத சம்பிரதாயங்களில் இருந்தல்ல. குறிப்பாக சமூகம் ஒரு அறியாமைச் சுமையை சுமக்க எத்தனிக்கிறது என்றால், அதற்கு ஒத்தடம் கொடுக்க எனது சினிமா சிரம் சாய்க்காது என்கிறார் ஹந்தகம.


சினிமாவை அவர் ஒரு வெற்றுச் சட்டமாக பார்க்காது தமது விவ ரணங்களை அனுப்புகின்ற ஒரு பிரதான மூலமாகப் பார்க்கின்றார். ஹந்தகமவின் சினிமா அவரின் நேரடி ஆக்கிரமிப்புக்களால் ஏற் பட்ட காயங்களா? என்ற வினாவை அவரிடம் கேட்கத் தோனுகிறது.

இவரின் இரண்டாவது திரைப்படம் 'மே மகே சந்த' (வுhளை ஐள ஆல ஆழழn) இது எனது நிலவு 2000ம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படம் தமிழ் சிங்கள உறவு பற்றி பேசுகின்றது. இந்தத் திரைப்படம் 2002ம் ஆண்டுகளில் இலங்கையில் இருந்த யுத்தம், சமாதானம், முரண்பாடு, இனவாதம் உள்ளிட்ட அம்சங் களைப் பற்றி நேர்த்தி மிகுந்த பாணியில் பேசுகின்றது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த 'தனி தட்டுவென் பியாம்பன்ன' - 2002. (ஒற்றை சிறகுகளால் பறத்தல்) என்ற திரைப்படம் பெண்ணியம் பற்றிப் பேசுகின்றது. ஒரு பெண் இரண்டு நிலை சார்ந்த பார்வைகளால் அவதி யுருவதும் அவளது எண்ணங்கள் சமூகத்தின் மத்தியில் தோல்வி யடைவதும் இந்தப் படத்தின் கதைக்கருவாகும். அதாவது ஓரினச் சேர்க்கை இதன் முக்கிய குறியாகும்.


2005 ம் ஆண்டு ஹந்தகமவின் தணிக்கைக்கு உட்பட்ட படம் 'அக்சரய' (யு டுநவவநச ழக குசைந) இத் திரைப்படத்தில் உள்ள காட்சிகள் தாய்க்கும் சேய்க்கும் இடையில் இருக்கின்ற பரஸ்பரத்தைப் பற்றிப் பேசுகின்றது என்ற வாதம் ஹந்தகமவால் முன்வைக்கப்பட்ட போதும், அது பாலியல் கருத்தைப் பதிவு செய்கின்றது என்ற வாதத்தால் தணிக்கை உட்பட்டது. சமய வாதிகளும் அடிப்படை வாதிகளும் திரைக்கு வர முன்னர் வன்முறையில் இறங்கியதால் தடைசெய்யப்பட ஏதுவானதுடன் இவர் சமூக விரோதி என்றும் பொதுவாக ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டார்.

இந்தத் திரைப்படம் தணிக்கைக்கு உட்பட்டதன் பின்னரே ஹந்த கமவின் ஆளுமை விரிவாகப் பேசப்பட்டது.

இவரது படங்கள் பொதுவாக கலாசார அடிப்படை வாதிகளி னதும், மரபு வாதிகளினதும் எதிர்ப்பைப்பெற்றுக்கொண்டன. அக்சரய திரைப்படம் திரைக்கு வராதபோதும் அது சீடிக்களாக வெளிவந்திருந்தமை குறிப்பிடத் தக்கது. இறுதியாக வெளிவந்த இவரது திரைப்படம் 'விது' இத் திரைப்படம் அரசியல் தலைமை களால் பாதிக்கப்பட்ட தனிமனித ஆளுமை நிறைந்த ஒரு சிறுவன் பற்றிப் பேசினாலும் ஆழமான நடைமுறை அரசியல் பற்றி குறியீட்டுப் படிமங்களுடன் வெளிப்படுத்தி இருந்தது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியல் கலாசாரம் எதிர்கால சந்ததியினரின் இருப்பை கேள்விக்குட்படுத்துகின்ற விதம் பற்றிய ஒரு அறிவுபூர்வமான வெளிப்பாட்டைத்தந்தது விது. சிறுவர் திரைப்படம் என்ற தோரணையிலேயே விது தன்னைப் பாதுகாத்துக்கொண்டது. 2010ஃ2011 ஆகிய ஆண்டுகளில் ஊடகங் களால் அதிக கதையாடலுக்கு உட்பட்ட திரைப்படம் விது.

இவ்வாரான திரைப்படங்கள் அரசியல் வர்ணங்களால் பல சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் உட்பட்டிருந்தமை கண்கூடு.

இறுதியாக இவரது திரைப் படங்களில் பாலியல் காட்சிகள் வெள்ளிடையாகக் காட்டப் படுவதாக விமரிசனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவரது சந்த கிணர, மே மகே சந்த, தனி தட்டுவென் பியாபன்ன, அக்சரய போன்ற திரைப்படங்களில் பாலியல் காட்சிகள் வெளிப் படையாக காட்டப்பட்டுள்ளன.


சடவாத மத இறுக்கங்கள் கலந்த ஒரு சமூகத்தில் இவ்வாறான பாலியல் காட்சிகள் கேள்விக் குட்படுவதும் அது ஏற்றுக் கொள்ளப் படுவதும் இருபக்க நியாயங்களைக் கொண்டிருந்தன.

சுனாமிக்குப் பின் எழுந்த சமூக ஒற்றுமை கருத்து முன்மொழிவை, வலுவூட்டும் வண்ணம் இவரது தொலைக்காட்சி நாடகம் ஒன்று தெரன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுக்கிடையில் உள்ள இனத்துவ, அடையாளப் பிரிவுகளை ஒப்பீட்டும், அதனை களைவதற்குமான ஒரு ஊடக முயற்சியாக அமைந்தது. 2005ம் ஆண்டு இந்த தொலைக்காட்சி நாடகம் மக்களிடத்தில் பெரு வரவேற்புப் பெற்றது.
அண்மையில் ஹந்தகமயின் 'இனி அவன'; என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. இத்திரைப்படம் தமிழ் விடுதலைப் போராளி
ஒருவரின் வாழ்வைப் பேசுகின்றது

அசோக்க ஹந்தகம என்பவரை நான் முதல் முதல் அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் 2005ம் ஆண்டு சந்தித்தேன். தணிக்கைக்கு உட்பட்ட 'அக்சரய' என்ற திரைப்படம் தொடர்பாக அப்போதிருந்த விவாதங்களை ஒருங்கிணைத்த நிகழ்வு அது. அந் நிகழ்வில் என்னை கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் அசோக்க ஹந்தகமவிற்கு அறிமுகம் செய்துவைத்தார்.

அந்த அறிமுகம் அவருடனான நட்புக்கு வழிசமைத்திருந்தது.

திரு. ஹந்தகம அவர்களது ஆளுமையை இன்று சர்வதேசம் மெச்சிக் கொண்டிருக்கின்றது. அவ்வாறான ஒரு வேளையில் அவர் பற்றி பதிவுகள் ஈழத்து சினிமா வாசகர்களுக்கு சற்று ஆருதல் தரும் என்று நம்புகிறோம். அதற்கு படிகள் தனது பங்களிப்பை வழங்குகின்றது.

உங்கள் பார்வைக்கு எங்கள் கருத்து - ஆசிரியர் கருத்து: படிகள் 31


வடமத்திய மாகாண சபையின் தற்போதைய கல்வி, தகவல் தொழிநுட்ப மற்றும் கலாசார அமைச்சர் கௌரவ எஸ்.எம். பேசல ஜயரத்தன பண்டார அவர்களின் வழிகாட்டலில் அமைச்சின் செயலாளர் அவர்களின் ஏற்பாட்டில் மகாண தமிழ் சிங்கள எழுத்தாளர்களுடனானா சந்திப்பொன்று அண்மையில் மாகாண அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 எழுத்தாளர்களுடனான இச்சந்திப்பில் அநுராதபுர மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்து தமிழ் மொழி மூல எழுத்தாளர்கள் 5 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா, கெகிரா சுலைஹா, நாச்சியாதீவு பர்வீன், அநுராதபுரம் றஹ்மதுல்லாஹ், எல். வஸீம் அக்ரம் அகியோர் ஆவர்.
இச்சந்திப்பின் பிரதான நோக்கம் மாகாண சபையின் கீழ் தமிழ் சிங்கள எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து அவர்களது வெளியீடுகளுக்கு பின்புலம் ஒன்றை உருவாக்குவதாகும்.
இச்சந்திப்பில் தம்மைத் தாமே அறிமுகம் செய்து கொண்ட எழுத்தாளர்கள் தமது எழுத்துக்களை நூல் உருவில் கொண்டுவருவதற்குரிய பிரச்சினைகளை முன்வைத்ததுடன். பாடசாலை மட்டத்திலிருந்து எழுத்தாளர்கள் உருவாகுவதற்கான பொறிமுறைகள் ஏற்படுத்தப்படுவதன் அவசியங்களையும் குறிப்பிட்டனர்.
மிகவும் அறிவுபூர்வமாகாவும் எளிமையாகவும் எழுத்தாளர்களது பிரச்சினைகளை அடையாளம் கண்டு கொண்ட அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் நூலுருவாக்கங்களை நெறிப்படுத்தி அதன் அச்சகப் பிரச்சினைகளை தீரப்பதற்கான எதிர்கால திட்டங்களை முன்மொழிந்தனர்.
அதில் மாகாண கல்வி அமைச்சிற்கு கொண்டுவரப்படவுள்ள அச்சியந்திரங்கள் ஊடகா மாகாண எழுத்தளார்களின் நூற்களை அச்சிட்டு குறைந்தபட்ச உதவிகளை எழுத்தாளர்களுக்கு வழங்குவதனை கருத்திட்டமாக கொண்டுள்ளதனை குறிப்பிட்டனர்.
குறிப்பாக இதுவரை இம்மாகணத்தில் தமிழ் மொழி மூல எழுத்தாளர்களுக்குள்ள பிரச்சினைகள் பற்றியும் அவர்களது கடந்தகால செயற்பாடுகள் பற்றியும் அவர்களது சமூக நல்லினக்க எழுத்துத்துறை பங்களிப்புகள் பற்றியம் விதந்து கருத்துக்கள் முன்மொழியப்பட்டதன் காரணமாக அமைச்சர் மிக நெருக்கமான அணுகுமுறைகளை கையாண்டமை குறிப்பிடத்தக்கது
வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற இந்நிகழ்வு எழுத்தாளர்களது பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான வழிகளைத் திறக்கும் என்ற நம்பிக்கை இருப்பதுடன். பிரதேச எழுத்தாளர்கள் இந்த விடயத்தில் தீவிர செயற்பாடுகள் ஊடாக தமது இலக்குகளை அடைந்து கொள்ள துணியவேண்டும் என்றும்  படிகள் இங்கு விதந்து குறிப்பிட விளைகின்றது.

படிகள் 31 - புதிய இதழ்


அநுராதபுர முஸ்லிம்களின் வரலாற்று ஆவணம்

பூர்வீக கதவுகளைத் தட்டும் 'அநுராதபுரத்தின் முதுசொம்'
வரலாற்று ஆவணங்கள் மீதான வாசிப்பு


-    எல். வஸீம் அக்ரம்


இலங்கையின் வரலாற்றில் அநுராதபுரப் பிரதேசம் தனித்துவமிக்க ஒன்றாக இருக்கின்றது என்ற கருத்து வரலாற்று ஆய்வாலர்களால் அடிக்கடி முன்மொழியப்படுகின்றது. இவ்வாறு தவிர்க்க முடியாத ஒரு பிரதேசத்தின் சிறுபான்மை சமூகத்தின் இருப்பை ஆவணப்படுத்த வேண்டிய தேவை அந்தந்த சமூகங்களுக்கு இருக்கின்றது. அவ்வாறான ஒரு பணியை அநுராதபுரம் முதுசம் நிறைவேற்றியுள்ளது என்று புலங்காகிதமடைகிறோம்.

அத்துடன் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆய்வு செய்கின்ற அல்லது செய்யப்பட்ட ஆய்வுகளின் முக்கிய கருப்பொருளில் அநுராதபுரத்து இரசாதானியிலிருந்து ஆய்வு செய்ய வேண்டும் என்பது அநுராதபுர முதுசத்தின் பிரதான அடைவாக இருக்கின்றது. தவிரவும் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் அநுராதபுர நகரப் பிரதேச வாழ் மக்களின் வரலாற்று ஆவணங்களை பூர்வீகம், அரசியல், சமூகவியல், பண்பாடு, நாகரீகம், கல்வி மற்றும் கலை இலக்கியம் என்ற பல்வேறு துறைகள் ஊடாக இன்றுவரையுள்ள விடயங்களையும் அறிந்திடாத முதுசங்களையும் அநுராதபுரம் முதுசொம் என்ற ஆவணம் நமக்கு கோடிட்டுக் காட்டியுள்ளது.

இவ்வாவணம் அநுராதபுரத்தில் சேவை பத்து வருடங்களுக்கு மேல் அரச சேவையில் சேவை செய்து, ஓய்வுபெற்ற ஊழியர்களை கௌரவிக்கும் விழாவில் வெளியிடப்பட்டதாகும். இவ்வாண காப்பகத்தை நூலாக்கியவர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள். இந்த சமூகத் தேவையை உதவியவர் அல்ஹாஜ் எச்.எஸ்.ஏ. முத்தலிப் அவர்கள்.

இன்று அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் தமது இருப்பை பதிவு செய்வதில் அவர்களது வரலாறு தொடர்பான தவறான புரிதல்கள் இருப்பதானல் இவ்வநுராதபுர முதுசொம் இந்த சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு அலப்பரிய சாதனையை நிறைவேற்றியுள்ளது என்று முகுடம் சூட்டலாம். வெறும் வார்த்தை கதையாடல்களுடாக சிறுபான்மைச் சமூகத்தின் இருப்பை விலைபேசிக் கொண்டு இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் ஆவண ரீதியாக மட்டும் பேச விளைகின்ற இவ்வாறான முயற்சியை நாம் முன்னின்று வாழிநடத்தவும் வாழ்த்தவும் வேண்டும்.

காலம் காலமாக முஸ்லிம் சமூகத்தை ஒரு வியாபார சமூகமாக பேச விளைகின்ற இன்றில் அதற்கு ஒரு படி மேலே சென்று கிட்டத்தட்;ட பல நூறு ஆண்டுகள் பின் சென்று அநுராதபுர நகர முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணமாக்கியுள்ளனர்.

இந்நூலில் அல்லது ஆவணத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.பி.எம். ஹூசைன் அவர்களின் 'அநுராதபுரத்தில் முஸ்லிம்கள்' என்ற கட்டுரையும், ஆய்வு முகாமையாளர் எம்.எம். அலிகான் அவர்கள் எழுதிய 'ம(று)றைக்கப்படும் வரலாறு' என்ற கட்டுரையும் நூலராசியர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் எழுதிய 'அநுராதபுரம் முஸ்லிம்களின் பல்வேறு பதிவுகள்' என்ற  கட்டுரையும் நூலுக்கு மகுடம் சேர்க்கின்றன.

இந்நூலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.பி.எம். ஹூசைன் அவர்களின் 'அநுராதபுரத்தில் முஸ்லிம்கள்' என்ற கட்டுரை, அநுராதபுர முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றைப் பேசுகின்றதுடன் பாரம்பரியங்களையும் பேசுகின்றன. அவற்றில் குடியேற்றங்கள், குடிப்பரம்பல்கள், அம்மக்களின் ஆரம்ப வாழ்வு பற்றி நிறைவாகப் பேசுகின்றன.

ஆய்வு முகாமையாளர் எம்.எம். அலிகான் அவர்கள் எழுதிய 'ம(று)றைக்கப்படும் வரலாறு' என்ற கட்டுரை பிந்திய குடியேற்றங்கள், அவற்றின் பெயர்வு, அதற்கு பின்னணியான அரசியல் முறைகள் இன அச்சுறுத்தல்கள் என்பன பற்றிய விடயங்கள் ஆதாரபூர்வமாக சுட்டப்பட்டுள்ளன. இவ்விரண்டு கட்டுரைகளும் வரலாற்றின் தன்மையை பேசுகின்றது.

இவ்வொவொரு கட்டுரையின் பின் புலத்திலும் அநுராதபுர முஸ்லிம்களின் வரலாறு பின்வருமாறு பதிவு செய்யப்படுகின்றது.

கி.மு 6ம் நூற்றாண்டில் விஜயனின் வரலாற்றுடன் ஆரம்பமாகும் இலங்கை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே, இலங்கையில் அராபியர், பாரசீகர், எகிப்தியர் எனும் முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள் வாழ்ந்ததற்கான, வர்த்தக நோக்கத்திற்காக பயணத்ததிற்கான சான்றுகள் உள்ளன எனக் கூறி, அச்சான்றுகளையும் இவர் இக்கட்டுரையினூடாக முன்வைத்துள்ளார். முஸ்லிம்கள் அநுராதபுர நகரின் திசாவௌகம, பொன்னாரங்குளம், கும்பிச்சங் குளம், ஆமன்னரத்மல, நாச்சியாதுவ ஆகிய பிரதேசங்களில் தமது ஆரம்ப குடியிருப்புக்களை நிறுவினர் எனத் தொடரும் இவரது கட்டுரை இன்னும் பல விடயங்களை முன்வைக்கின்றது.

மேலும் அநுராதபுரத்தை ஆண்ட பண்டுகாபய மன்னன் தொடக்கம் பல மன்னர்கள் அரேபியர்களுடன் கொண்டுள்ள வர்த்தக தொடர்புகள் பற்றியும் இக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது. அக் கால கட்டத்தில் கச்சுத்தோட்டம், இசுறுமுனி, வெஸ்ஸகிரிய, ஒட்டுப்பள்ளம், திசாவௌகம, மிரிசுவெட்டி போன்ற இடங்கள் முஸ்லிம்களின் குடியிருப்புக்களாக விளங்கின. சிங்கள மன்னரின் கீழ் 'விதானை'யாக சேவையாற்றிய 'முத்து விதானை அசனார்' என்பவரின் வீட்டிலுள்ள இரு கற்றூணில் அவரது பெயர் முதலெழுத்துக்களைக் குறிக்கும் 'மு.அ' எனும் தமிழ் ஈர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

என்ற தகவல்களைப் பதிவு செய்துள்ளன. இவ்வாவணக் காபகத்தில் அநுராதபுரம் முஸ்லிம்களின் பல்வேறு பதிவுகள் என்ற கட்டுரை முன்னர் குறிப்பிட்ட ஏனைய இரு கட்டுரைகளிலும் இருந்து சற்று வேறுபட்டு மிக அண்யைத் (பிந்திய தகவல்கள்) தரவுகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பிந்திய தரவுகள் குறிப்பாக முஸ்லிம்களின் இன்றைய கல்வி, கலை இலக்கிய, சமயம் என்ற பெரும் பண்புகளால் நிறுவப்பட்டுள்ளன. 19ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய தகவல்கள் குறிப்பிட்டுச் சொல்லுளவுக்கு எந்த ஒருவரிடமும் இருக்கவில்லை. அவற்றை வாய்மூலமாக மட்டுமன்றி குப்பைத் தொட்டிகளிலுள்ள ஆவணங்கள் வரை கிளறி எடுத்து ஆவணமாக பேச முனைந்துள்ளதை இங்கு விதந்து குறிப்பிட வேண்டும்.

ஒரு கல்வியலாளராக, இலக்கிய கர்த்தவாக, ஆய்வாளராக, சமூக சேவகராக என்ற பல்பரிமாண முகங்கொண்டு அன்பு ஜவஹர்ஷா இந்த ஆவணங்களைப் பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவுகளில் உள்ள புகைப்படங்கள் முஸ்லிம்களின் மிக நுண்ணிய பிரச்சினைகளையும் பூர்வீக புதிவகள் மற்றும் களைவுகளையும் முன்னிறுத்தியுள்ளதை மனங்கொள்ள வேண்டும். ஆய்வு மாணவனாக சமூகத்தின் சகல விடயங்களின்பால் தன்னை செயற்படுத்தி தன்னை விஞ்சிய பணியை செய்துள்ளதாக புகழ முடியும்.

இந்தக் கட்டரையில் சமயம், கல்வி, கலை இலக்கியம், அரசியல்  தொடர்பான அரிய தகவல்கள் பதியப்பட்டுள்ள. அவற்றில் துறைசார் நிறுவனங்களின் மூலம், தோற்றம், அதன் பின்புலம், அவற்றுக்கு பணியாற்றியவர்களின் பெயர்கள் அவர்களின் பணி முறைகள் என்ற விடயங்கள் மிக விரிவாகவும் நுட்பமாகவும் பொறுப்புடனும் பதிவுகளாக இருக்கின்றன. அவற்றிலிருந்து சிலவற்றைப் பதிவு செய்கிறேன்.

1870 ம் ஆண்டு திசாவௌ குளத்தின் மத்தியில் காணப்பட்ட பள்ளிவாசல் உள்ளிட்ட பௌத்த மத வணக்கஸ்தலம் அல்லாத மத வழிப்பாட்டுத் தளங்கள் அகற்றப்பட்டன என்ற இனப்பிரிப்புச் செய்தி இங்கு பதியப்பட்டுள்ளது. இவற்றுடன் அநுராதபுர பள்ளிவாசல்கள் ஒட்டுப்பள்ளம் தர்கா உள்ளிட்ட தற்போதைய பள்ளிவாசல் நிர்மாணம் பற்றிய தகவல்களையும், அவற்றுடன் தொடர்புடைய பின்னணித் தகவல்களையும், மத்ரஸா, தக்கியா, அரபுக் கல்லூரிகளுட்பட்ட மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் ஆதாரபூர்வமாக இவர் முன்வைத்துள்ளார். இங்கு விதந்து குறிப்பிட வேண்டி ஒரு விடயம் 2012ம் ஆண்டு உடைக்கப்பட்ட ஒட்டுப்பள்ளம் தர்காவின் வரலாறும் அதே ஆண்டு தீக்கிரையாக்கப்பட்ட தக்கியா பற்றிய பதிவுகளும் இங்கு இருக்கின்றரதாகும்.

கல்வி தொடர்பான ஆய்வில் பாடசலைகளின் தோற்றம், அதில் பதிவு செய்த மாணவர்கள் மற்றும் இன்னும் அரிதான தகவல்களைப் பதிவு செய்துள்ளமை வரவேற்கத்தக்கது. அநுராதபுர நகரில் உள்ள ஸாஹிரா மகா வித்தியாலயம், விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலம் ஆகிய இரு பாடசாலைகளின் தோற்றம், வளர்ச்சி என்ப இங்கு பதிவாகியுள்ளதுடன், அவற்றின் தோற்றத்திற்கு முன் இவர்களது கல்வி முறை பற்றி பதிவுகளும் காணப்படுகின்றன. (கட்டுரையில் உள்ள விடயங்களை சுருக்கமாக பதிவு செய்கிறேன்)

இந்நூலில் தொகுக்கபட்டுள்ள காலை இலக்கியம் சார்ந்த பதிவுகள் ஏலவே பல்வேறு கட்டரைகள் வாயிலாக (அன்பு ஜவஹர்ஷா) பேசப்பட்டிருந்தமையினால் அவற்றினை மிக எளிய வடிவங்களைக் குறிப்பிடலாம். கலை இலக்கியங்கள் காலத்தின் பதிவுகள் என்ற அடைமொழியை அவை நிறுவியுளுள்ளன. குறிப்பாக அநுராதபுரத்திலிருந்து வெளிவந்த கலை இலக்கிய ஆவணங்களையும் வெளிவரும் சஞ்சிகைகள் பற்றிய குறிப்புக்களும் தொடர் அடிப்படையில் காட்டப்பட்டுள்ளன. அவையாவன:

•    சிக்கந்தர் மகத்துவக்கும்மி (1928 -முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
•    விதி-அறிவு-விளக்கம் (1938-முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
•    கைபுட்சிக மாலை (உமர்லெப்பை ஆலிம் சாய்பு - அநுராதபுரத்தில் வெளியீடு)
•    தமிழ்மணி கையெழுத்துச் சஞ்சிகை (எம்.எஸ்.ஹூசைன்)
•    இளைஞர் குரல் (இரு ஆசிரியர்களுள் ஒருவர் மர்ஹூம் அமீர் சுல்தான்)
•    மாணவர் குரல் (அண்டன் ஞானராஜா)
•    தமிழ்ச்சுடர் (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா)
•    புத்தொளி (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா)
•    வீரத் தமிழன் (மர்ஹூம் எஸ்.எச். எம்.ஸஹீர் )
•    தேன்துளி (மர்ஹூம் எஸ்.எம். ஸாலிஹ்)
•    பிறையொளி பாடசாலைச் சஞ்சிகை (அன்பு ஜவஹர்ஷா)
•    பொறிகள் - தெகுக்கபட்ட கவிதைகள் (அன்பு ஜவஹர்ஷா)
•    காவிகளும் ஒட்டுண்ணிகளும் - (அன்பு ஜவஹர்ஷா)
•    அன்னை (எப். ஆர் பரீட்ஹ்)
•    அல் மதீனா (எப். ஆர் பரீட்ஹ்)
•    தொலைச்சுடர் (ஜன்ஸி கபூர் )
•    அநுராகம் (ஜன்ஸி கபூர் , எப். ஆர் பரீட்ஹ், ஏ.பி.எம். அன்சார் )
•    படிகள் (எம். வஸீம் அக்ரம்)


இங்கு பதியப்பட்டுள்ள விடயங்களில் அரச துறைகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் வரலாறு மிக முக்கியமான பதிவுகளாக கொள்ளலாம். அரச சேவையில் முஸ்லிம்களின் பணி என்பது அப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கிய ஆவணமாக இருக்கின்றது. இதில் அநுராதபுர இராசதாணி முதல் அரச நிறுவனங்களில் சாதாரண இலிகிதர் வரை சேவையாற்றியவர்களின் அனைத்துவிடயங்களும் அடக்கப்பட்டுள்ளமையை இன்னும் மெச்ச இயலும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முஸ்லிம் பெண்களின் சமூக கலாசாரப் பணிகள், விளையாட்டுத் துறைகளில் ஈடுபட்டு சாதணைகள் புரிந்தவர்களின் பெயர்கள் என்ற பல்வேறு தரவுகள் தொடர்புற்றும் தொடர்பு படாமலும் பதியப்பட்டுள்ளமை ஈர்ந்து கவனிக்கத்தக்கது.

நூலின் (கட்டுரையின்) பின் இணைப்பாக சேர்க்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள், ஆவணங்கள் பற்றிக் குறிப்பிடுவது இந்த நூலின் மிக முக்கிய கட்டம் எனலாம். இதில் பல்வேறு ஆவணங்கள் சுமார் 100 ஆண்டுகளை திரும்பிப் பார்க்க வைக்கின்றன. இதில் 1900 களில் அநுராதபுர புதிய நகரப்; பிரதேசத்தில் பிறந்த பிள்ளைகளின் பிறப்பத்தாட்சிப் பத்திரம், அநுராதபுரம் பழைய நகர், புதிய நகருக்கு மாற்றப்பட முன்னர் இருந்த குடியிருப்பு விதியமைப்புத்திட்டங்கள், பிச்சைத் தம்பி முஹதீன் தம்பி என்பவர் 1946ம் ஆண்டு நகர (தற்காலிக) முதல்வராக நியமனம் பெற்ற கடிதத்தின் பிரதி, 1899ம் ஆண்டு அநுராதபுரம் பழைய நகர முஸ்லிம்களின் இருப்பை பதிவு செய்துள்ள மாகாணப் பதிவின் வெளியீட்டு அடையாளம், அந்த ஆவணத்தில் முஸ்லிம்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள பத்தியின் பக்கப்பிரதி, 1891ல் திசாவௌ எனும் இடத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தாமான காணியொன்றின் உறுதிப்பத்திரம், 1960 ஆண்டு பழைய நகர் பள்ளிவாயலின் பரிபாலன சபை விபரம், 1989.10.18 அன்று பிறந்த பிச்சைத் தம்பி மொஹிதீன் தம்பியின் பிறப்பத்தாட்சிப் பத்திரத்தில் அவரது தந்தையின் தொழில் நகர பாதுகவலர் அநுராதபுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஆவணம், அவரது காதி நீதாவன் விண்ணப்பம், 1989ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியின் நில அளவைப் படம், 1957ம் ஆண்டு முதல் முறையாக அகில இலங்கை மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் 9 முஸ்லிம் இளைஞர்கள் கலந்து கொண்டமைக்கான பத்திரிகைச் செய்தி, 1927ம் ஆண்டு ஒட்டுப் பள்ளம் தர்காவில் ராத்தீப் நடத்தியவர்களின் பெயர்ப் பட்டியல், 1959, 1961ம் ஆண்டுகளில் முஸ்லிம்களிடம் பெறப்பட்ட காணிகளுக்கான வர்த்தமாணி, 1958.12.12. அன்று இருந்த முஸ்லிம் வாலிபர் சங்க நிர்வாகிகளின் கடிதம், 1957ம் ஆண்டு சுங்காரு உழவு இயந்திர நிலையத்தில் கனிசமான முஸ்லிம்கள் வாழ்ந்ததந்கான புகைப்படம், 1967களில் நகர முஸ்லிம் இளைஞர்களின் சமூக சேவா நிறுவனத்தின் அங்குரார்ப்பணப் புகைப்படம், 1968ம் ஆண்டு முஸ்லிம் வாலிபர் சங்கத்தினால் கட்டிகொடுக்கப்பட்ட முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் முதல் நாள் சேர்ந்த மாணவர்களின் புகைப்படங்கள், 1967ம் ஆண்டு மே தின ஊர்வலம் நடத்திய முஸ்லிம் சோசலிசக் கட்சியின் ஊர்வலப் புகைப்படம், முஸ்லிம்களின் பூர்வீகத்தை நிறுவுகின்ற மு.அ என்று அழைக்கப்பட்ட முஸ்லிம் பிரதிநிதியின் பெயர் பொறிக்கபட்ட கற்தூண்கள் இரண்டின் புகைப்படம். உள்ளிட்ட இன்னும் பல ஒளிப்படங்கள், புகைப்படங்கள் சமய, சமூக, கல்வி, கலை இலக்கிய, விளையாட்டு மற்றும் அடையாள விடயங்களின் முஸ்லிம்களின் இருப்பை பதிவு செய்கின்ற ஆவணங்கள் இணைக்கபட்டுள்ள.

இந்த ஆவணங்களில் பெரும்பாலனவை மர்ஹூம் அல்ஹாஜ் அமீர் சுல்தான் அவர்களின் ஆவணங்களாக இருப்பது கவனிக்கத்தக்கது.

இந்த சகல பதிவுகளுக்குப் பின்னும், இந்தப் பதிவுகளை ஆவணமாக்கவும் சமூக மாற்றத்திற்காக உழகை;கின்ற ஒரு சக்தியாகவும் இருக்கின்ற தனிமனிதர்களும் குழுக்களும் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இது தவிர இந்த முயற்சி பெரும்பான்மைச் சமூகத்திற்குள் இருக்கின்ற சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பை பாதுகாக்கின்ற அறிவுபூர்வமான ஒன்றாக கருதலாம். இது அநுராதபுர சிறுபான்மைச் சமூகத்திற்கு மட்டும் உரித்தான குறைந்த பட்ச முயற்சியாக இருப்பினும் இது ஈழத்து ஆவண காப்பாளர்களின் தேவையாக இருக்கின்றது. இவ்வாய்வுக் கட்டுரைகள் மற்றும் ஒளிப்படங்கள், புகைப்படங்கள் என்பன இணையத்திற்கு பதிவேற்றப்பட வேண்டியதன் தேவை இங்கு வழியுறுத்த வேண்டும்.

ஏதிர்காலங்கள் விரல் அடையாளங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படுகின்ற நிலை தோன்றியுள்ள நவ யுக நிலையில் அதற்கான காப்பு முயற்சிகளை இப்போதே ஆரம்பிப்பது சாலச்சிறந்தது என்று பணிவுடன் குறிப்படுகிறேன்.
நிஹலிசம்

கேட்டதை அறிந்தேன். அறிந்ததைப் பகிர்ந்தேன்.

நிஹலிசம் (நீலிசம்)

இல்லாமை தத்துவம் அல்லது நீலிசம் (Nihilism, ஒன்றுமில்லை என்ற பொருள்படும் இலத்தீன் சொல் nihil ) என்பது ஒரு மெய்யியல் ரீதியான நம்பிக்கை, இது, வாழ்க்கையின் அர்த்தமுள்ள அம்சங்களில் ஒன்று அல்லது மேற்பட்டதை மறுத்தலைக் குறிக்கிறது. மிகப் பொதுவாக, நீலிசம் என்பது இருத்தலின் இல்லாமை தொடர்பாக விவரிக்கப்படுகிறது, அதாவது வாழ்க்கை[1] எந்தவொரு நோக்கமும் பொருளும், அல்லது உள்ளார்ந்த மதிப்பும் இல
்லாமல் இருக்கிறது. நியாய இல்லாமை தத்துவவாதிகள், உண்மையில் நியாயம் என்று எதுவும் இல்லை, உருவாக்கப்பட்ட நியாயம் என்ற மதிப்புகள் மாயையால் உருவாக்கப்பட்டவை. நீலிசம், தத்துவரீதியான அறிவுசார், மாயை சார்ந்த, அல்லது மாயைசார்ந்த அறிவு வடிவங்களை எடுக்கக்கூடும், அதாவது முறையே, அறிவின் சில அம்சங்கள் சாத்தியமில்லை அல்லது நமது நம்பிக்கைக்கு மாறானதாக இருக்கும், உண்மையின் சில கூறுகள் உண்மையில் இருப்பதே இல்லை என்ற பொருள்களைத் தரும்.