பதிவுகள்

  • www.wasimakrampage.blogspot.com - padihal@yahoo.com - padihal@gmail.com

அநுராதபுரம் மாவட்ட கலை இலக்கியப் பதிவுகள்

அநுராதபுரம் மாவட்ட கலை இலக்கியப் பதிவுகள் 
- கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா 
இலங்கையில் உள்ள இருபத்தைந்து மாவட்டங்களில் நிலப்பரப்பைப் பொறுத்தவரையில் பெரிய மாவட்டமான அநுராதபுரம் மாவட்டத்தில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் தொடர்பாக பேசப்படும் போது,  தற்போது இந்த மாவட்டத்தில் தமிழ் மொழி பேசப்படும் 110க்கு மேற்பட்ட கிராமங்களும் 63 முஸ்லிம் பாடசாலைகளும் 2 தமிழ்ப் பாடசாலைளுகம் உள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் ஆகும். இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை அண்மைய கணக்கெடுப்பின்படி 19.6 இலட்சமாகும். இதில் சுமார் 73ஆயிரம் பேர்கள் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழைத் தாய் மொழியாக கொண்டவர்களாவர். 
பேராசிரியர் உக்குபண்டா கருணானந்த அவர்கள் வலிசிங்க ஹரிச்சந்தர் பற்றி எழுதிய நூல் ஒன்றில் 1871 தொடக்கம் 1911 வரை அநுராதபுரத்தின் சனத்தொகையை இன, மத ரீதியாக காட்டியுள்ளார். அதன்படி, இக்கால பரப்பில் (1871 – 1911 வரை) தமிழர்கள் முதலாவதாகவும், சிங்களவர்கள் இரண்டாவதாகவும் முஸ்லிம்கள் சிறிய வித்தியாசத்துடன் 3ஆவதாகவும் காணப்படுகின்றனர். 
இது அநுராதபுரம் என்ற பிரதேசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாக இருக்கலாம். இந்த பரந்த மாவட்டத்தை பொறுத்தளவில் மற்றைய பிரதேசங்களிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு சாட்சியாக சில கிராமங்களில் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் பாடசாலைகள் இருப்பதை அத்தாட்சியாக கூறலாம். 
அநுராதபுரம் பழைய நகரில் 1940களில் இருந்து 1971ஆம் ஆண்டுவரை வாழ்ந்த இலக்கிய வித்தகர் அநு.வை. நாகராஜன் அவர்கள் மல்லிகையில் இப்பகுதி தமிழ் மக்களின் இருப்புத் தொடர்பாக எழுதியுள்ள ‘நாணலை வருடும் அலைகள்” என்ற கட்டுரையில் மிக ஆழமாக இவ்விடயம் பற்றி குறிப்பிட்டுள்ளார். 
வன்னி எல்லையில் இருக்கும் அநுராதபுரம் முன்னொரு காலத்தில் ஓர் இராசதானியாகவும் இராஜரட்டையின் தலைநகராகவும் விளங்கியது. தென்னிந்தியப் படையெடுப்பால் இந்நகர மக்கள் தென்திசைக்குப் புலம்பெயர்ந்தனர். அதனால் அதன் நீர் வளமும் நில வளமும் தூர்ந்தன. நாடு காடாயிற்று. இது முடி மன்னர் காலத்திற்குப் பின் வந்த வரலாறு. கால மாற்றத்தில் ஐரோப்பியரின் வருகையின் பின் குறிப்பாக, ஆங்கிலேயர் ஆட்சியின் போது வளங்குன்றி வரண்டுகிடந்த வன்னிப்பிரதேசம் புனருத்தாபனம் பெற முன்னுரிமை பெற்றது. அதன்பயனாக தூர்ந்த குளங்களும் நீர் அணைகளும் மீளப்புப் பெற்றன. காடுகள் அழிக்கப்பட்டன. பயனுறு களனிகளுடன் மக்கள் குடியமர்வுகளும் தோற்றுவிக்கப்பட்டன. அதேவேளை இம்மண்ணில் மறைந்திருந்த தொல்கலை, கலாசார சின்னங்கள் அகழ்ந்து ஆராய் வேண்டி தேவையும் ஏற்பட்டது. இப்பணிக்கு திரு. பெல் எனும் ஆங்கிலத் துறை மகனார் தொல்பொருள் ஆய்வுத் திணைக்கள அதிகாரியாக அநுராதபுரம் வந்து, அநுராதபுர நகரையும் அதன் சூழலையும் தன் ஆய்வுகளுக்கு உட்படுத்திக் கொண்டார். இவ்வேளைகளுக்கு கூலியாக்கள் தேவைப்பட்டனர். அதற்காக மலேரியா நுளம்பு மண்டிய அக்கால கட்டத்தில் வன்னிக் கிராமத்துச் சிங்களவர்களும் வடக்குக் கிழக்கு மாகாண தமிழரும் வந்தேறு குடிகளாயினர். தமிழரைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாராட்சித் தமிழர் தமது வியாபார நோக்கத்திலேயே இங்கு வந்திருந்தனர். காலகெதியில் இவர்களே இந்நகரின் சொத்து சுகம் உள்ளவர்களாக மாறினர். பழைய நகர் என இப்போது அழைக்கப்படும் அநுராதபுரத்துப் பழைய நகர்ப்பிரதேசம் ஒரு காலத்தில் குட்டி வடமாராட்சி என பெருமை பெற்றிருந்தது. அந்நாளில் இங்கு குடியேறிய தமிழர் சிங்கள மக்களோடும் ஏனைய இனங்களோடம் இணைந்து வாழ்ந்தனர். ஆயினும் தமக்கே உரித்தான கலை கலாசார பின்னணியை நழுவிடாதும் கல்விக் கேள்விகளை நழுவி விடாது வாழ்ந்தனர். 
மேற்சொல்லப்பட்ட குறிப்பானது தமிழர்கள் வாழ்வு பற்றி குறித்துக்காட்டப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் தொடர்பாக ரொபட் நொக்ஸ் தனது வராற்று நூலில் 1689ஆம் ஆண்டு வருகை தந்த போது மலபார் மக்களே அதிகமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். 1871 அளவில் 1870ஆம் ஆண்டு காலப்பகுதியில் திஸ்ஸ வௌ குளம், பொன்னாரங் குளம், குமிச்சங்குளம், ஆமன வௌ, நாச்சாதுவ, கலாவௌ போன்ற இடங்களில் நிரந்தரக் குடியிருப்புகளை விட்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டிய நிலை உண்டானமைக்குக்காரணம், குளங்களை ஆங்கிலேயர் புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய தேவையின் பொருட்டாகும். 
1882ஆம் ஆண்டுக்கு முன்னர் அநுராதபுரம் ராட்சியத்திற்கு உட்பட்ட பெருமளவு நிலப்பரப்பு முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததாக ஆய்வு முகாமையாளர் எம்.எம். அலிக்கான் ‘மறை(று)க்கப்படும் வரலாறு” என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அநுராதபுரம் முஹாந்தரமாக சின்னத்தம்பி பிச்சைத் தம்பி என்பவரே இருந்துள்ளார். இவர்கள் மன்னார் மாவட்டத்தின் முசலிப் பகுதியிலிருந்தும் வேறு பிரதேசங்களிலிருந்தும் யானை பிடித்தல், விவசாயம், வர்த்தகம் போன்ற நோக்கத்திற்காக இங்கு வந்து குடியேறியவர்களாவர். 
மேல் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இன, சமய சனத்தொகை புள்ளி விபரங்களின் அடிப்படையானது முன்பந்திகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள சாதனங்களின்படி, உண்டான குடிப்பரம்பலால் அமைந்ததாகும். 
அநுராதபுரம் நகரசபையின் முதலாவது தலைவராக 1933ஆம் ஆண்டு தொடக்கம் 1944ஆம் ஆண்டு வரை சட்டத்தரணி எஸ். நடராஜா அவர்களும் அதன்பின்னர் ஆர்.வி. கந்தசாமி அவர்களும் 1946 தொடக்கம்,  1952 வரை ஆறு வருடங்களும் மொத்தமாக 19 வருடங்களுக்கு மேல் நகரசபைத் தலைவர்களாக கடமையாற்றி உள்ளார்கள். ஏ.எல்.எம். ஹனிபா உபதலைவராகவும் காதர் சாயிபு செய்யது அஹமத் உறுப்பினராகவும் கடமை புரிந்துள்ளனர். 
மேற்சொல்லப்பட்ட பதிவுகள் அநுராதபுரம் மாவட்டத்தின் தலைநகராக இருந்த அநுராதபுரத்தின் தமிழ் முஸ்லிம் மக்களின் இருப்புத் தொடர்பாக குறித்துக்காட்டக் கூடிய பதிவாக உள்ளது. நூற்றுக்கணக்கான வருடகாலமாக அநுராதபுரம் பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த போதிலும் இவர்களின் வரலாறு முழுமையாக எங்கும் பதியப்படவில்லை. விழா மலர்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டுரைகளில் சில பதிவுகள் காணப்படுகின்றனர். பெரும்பான்மை இனவரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்றை திரிவுபடுத்தும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். இது மிக கவலைக்குரிய விடயமாகும். 
இந்த வகையில் கலை இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அநுராதபுரப்பிரதேச தமிழ் பேசும் மக்களின் இருப்பை பதிவதற்கு 10ஆண்டுகளமாக தொடர்ந்து இலக்கியத் தடத்தில் கால்பதித்து வரும் படிகளின் 10வது ஆண்டு மலரில் இடம்பெறும் இந்த ஆக்கம் குறிப்பிடத்தக்க ஒரு ஆவணப்பதிவாக, இங்கு நூற்றாண்டுகால இலக்கிய வரலாறு தொடர்பான தகவல்கள் மீள நோக்கப்பட்டு ஒரு பதிவாக பின்வருமாறு பதியப்படுகின்றது. எழுத்துத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலாக இக்கட்டுரை தொகுக்கப்படவில்லை. நூல்கள் மூலம், ஆக்கங்கள் மூலம் நம்பிக்கைக்குரியவர்கள்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் இக்குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. அநுராதபுரப்பிரதேச இலக்கியப்படைப்பாளிகள் என்ற தலைப்பில் இவர்கள் ஆவணம் ஆக்கப்படும் போது இதைவிட விரிவான விபரங்கள் சேர்க்கப்படலாம். 
எப்.எப். சப்ரினா கருத்தரங்கு ஒன்றுக்காக தொகுத்த 45 பக்க ஆய்வுக் கட்டுரை ஒன்றில் மேற்சொன்ன எழுத்தாளர்கள் தொடர்பான விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த ஆய்வுக்கட்டுரையில் எம்.முஹம்மது மீராலெப்பை ஆலிம்சாஹிபு, அ.லெ. உமருலெப்பை ஆலிம், ஏ.சி.முஹம்மது ஹனிபா (அன்புதாசன்), எம்.எஸ்.சாலிஹ் (வித்தகன்), எம்.எஸ்.ஹ_சைன், எம்.அமீர்சுல்தான் (இளந்தீரன்), அன்பு ஜவஹர்ஷா, ஏ.ஆர்.எம். பர்வீன் (நாச்சியாதீவு பர்வீன்), எஸ்.எச். சாஹிர், மௌலவி ஏ.பி. மௌஹ்மூத், ஏ.பி.எஸ். ஹமீட், கே.எம். அஹமட் கான், எஸ்.எம். உவைஸ். சரீப், ஏ.சி. ராவுத்தர் நெய்னாமுஹமட், எம்.எச்.எம். இப்ராஹிம் (புரட்சி இளைஞன்), எஸ்.எச். சாதிக்குள் ஜானா, எப். பாத்திமா சப்ரினா, அஹமட் எம். நசீர், எப். ராசிக் பரீட்ஹ், ஏ.பி.எம். ஹ_சைன், ஏ,எஸ். ஜஹன்னரா, (கெகிராவ ஸஹானா), என்.எம். சித்தீக், எம். றஹ்மதுல்லாஹ், எம். ஏ. றிஸ்வான் முஹமட், சாஹிரா சரீப்தீன், எம். ஆப்தீன், எம்.சீ. ரஸ்மீன், எஸ். சாஜஹான், சீ.எம். அமீன் (அன்பு அமீன்), ஏ.பி.எம். அன்சார், பி. நௌபர், மிஹிந்தலை பாரீஸ், எம்.சீ. நஜிமுதீன், எம். சஹ்ரின் அஹமட், எஸ். முசம்மில், ஆர். பாத்திமா நிஸ்ரின், எம்.எச். நூர்ஜஹான் பேகம், பிஸ்ருள் ஹாபி, ஐ. முஹமட் பௌமி, அப்துல் முனாப், எம்.எச்.ஏ. காசிம், ஏ.சி. தௌபீக், எஸ்.எம். அப்துல் ரஹீம், எம். காசிம், ஐ.எம். ஜமீல், எம்.எச். பாத்திமா பேகம்,  ஜன்சி கபூர், எம். ரீ. நாகூர் உம்மா, எஸ். ஆர். சித்தி ரிஜானா, பதுருன் நிசா இஸ்ஸத், எஸ்.எச். அபுல் ஹசன், ஏ.கே.ஏ. நிசா, எம். அபுதாலிப், ஆதம் அசீஸ், ஐ.எச். முபைனக், எம்.எஸ்.எம். பௌசி, காசிமுள் சித்திக்கா, சாஹிர் நிசாம்தீன், ஏ.ஆர்.எம். ரபியுதீன், எம்.சீ. சபூர்தீன், எஸ். சுபைதீன், எம். ரபியுதீன், எம்.ஏ. சுபுஹான், ஆர்.எம். தாரிக், ஏ.எம். ஜிப்ரி, எஸ்.ரீ. ஆரிப், ஏ. முஹாஜிரின், எம். முஹ்ருப், எம்.எம். ஜிப்ரி, எம்.எச். சுபஹான் (அபு நுஹா), எல். வஸீம் அக்ரம், எம். நிசாம், நேகம பஸான், அஜ்மிர்கான், எச்.எம். சப்ராஸ், எம். சியாத், லரீபா அபுபக்கர், யு.எம். நயீம், எஸ். சுஹாட், எம்.பி.எம். நௌபர், ஏ.எஸ். ஷர்மிலா, கே.எம். ஷபீக், றஸ்மிலா நிஹார் இவ்வாறான நீண்ட பட்டியலில் உள்ளவர்கள் கவிதை, சிறுகதை, நாடகம், அறிவுப்புத்துறை, ஊடகம் போன்ற பல்வேறு கலை இலக்கிய விடயங்களில் ஈடுபட்டு வந்தவர்களாவர், பெரும்பாலனவர்கள் சிறிது காலத்தின் பின் இலக்கியப் பணியிலிருந்து விலகினாலும் இவ்வாறான பதிவில் இவர்களின் பெயர்களையாவது குறிப்பிடுவது அவசியமானதாக இருக்கும். நீண்டகாலமாக எழுதிவருகின்றவர்களைப் பற்றியும் நூல்களை வெளியிட்டு வருகின்றவர்களைப் பற்றியும் கீழ்வரும் குறிப்புகளில் தகவல்கள் உள்ளன. இப்பதிவில் விடுபட்ட பழைய தகவல்களும், புதிய தகவல்களும் இப்பகுதி தமிழ் கலை இலக்கியவாதிகள் தொடர்பான முழுமையான தகவல்கள் சேர்க்கப்பட்டு நூலுருப் பெரும் போது, இந்தப்பணி பூரணமாகும் என எண்ணுகிறேன். இக்குறிப்புகள் தலைப்புக்கு ஏற்ப நாம் ஆராய முற்படும் போது இப்பாடசாலையில் பழம்பெரும் பாடசாலைகளாக தலை சிறந்து விளங்கிய புனித வளனார் கல்லூரி இப்பகுதி இலக்கிய வளர்ச்சியின் கால் கோளாக இருந்தமையை யாரும் மறுக்க முடியாது. பிற்காலத்தில் அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம், அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம் போன்றவையும் இக்கிரிகொள்ளாவ முஸ்லிம் மகாவித்தியாலயம், கஹடகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயம், நேகம முஸ்லிம் மகா வித்தியாலயம், ஆகிய பாடசாலைகள் இந்த வகையில் இலக்கிய முயற்சிகளுக்கு அத்திவாரம் இட்டுள்ளன. 
முஹமத்தியன் கொலிஜ் என்ற பெயரில் ஒட்டுள்ளப்பள்ளம் என்ற பகுதியில் முகாந்திரம் மொஹிதீன் தம்பி மரைக்காரின் பொருள் உதவியால்,  1900 - 1948 காலப்பகுதியில் வாழ்ந்த இப்பகுதியின் மூத்த வரகவியான முஹம்மது மீரா லெப்பை அரபு கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்த மூத்த கவிஞரின் மூன்று கவிதைத்தொகுதி தொடர்பாக தகவல்கள் உள்ளன. 1929ம் ஆண்டு சிக்கந்தர் மகத்துவக் கும்மி என்ற நூலும் 1938ஆம் ஆண்டு விதி - அறிவு - விளக்கம் நூலும் அச்சேறின. இக்கவிஞரால் 1935ஆம் ஆண்டு எழுதி முடிக்கப்பட்ட ‘அஹ்காமுத்தீன்” என்னும் தீன் நெறி நியமம் என்ற நூல் இன்னும் அச்சேறவில்லை. இதன் கையெழுத்துப் பிரதி இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவiரிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாக கொண்டு அநுராதபுரம் பள்ளி வாசலின் பேஷ் இமாமாக (கதீப்) கடமையாற்றி அ.லெ. உமரு லெப்பை  ஆலிம் சாயிபு அவர்களால் இயற்றப்பட்ட கைப்புட்சிசு மாலை என்ற கவிதை நூல் 1930ஆம் ஆண்டு அளவில் வெளியிடப்பட்டது. கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, இவைகளே ஆரம்பகால வெளியீடுகள் ஆகும். இத்துடன் பழைய நகர கதிரேசன் ஆலய முருகன் மீது பாடப்பெற்ற ‘ஊஞ்சற் பா” என்ற நூல் தொடர்பாக தகவல் ஒன்றும் உள்ளது. 
இன்றும் எம்மோடு 84 வயதிலும் இலக்கிய நிகழ்வுகளுக்கு வருகைதரும் அல்ஹாஜ் எம்.எஸ். ஹ_சைன் 1945 - 1948 காலப்பகுதியில் அநுராதபுரம் புனித வளனார் கல்லூரியின் கையெழுத்துச் சஞ்சிகையான ‘தமிழ் மணி” என்ற சஞ்சிகையை ஆசிரியராக இருந்து நடாத்தியுள்ளார். அநுராதபுரத்தை பிற்ப்பிடமாக கொண்டிராத போதும் 1950ஆம் ஆண்டு முற்பகுதியில் புகுந்தகமாக கொண்ட அப்துல் காதர் முஹம்மது ஹனிபா (அன்புதாசன்) என்ற எழுத்தாளர் இப்பகுதியில் வாழ்ந்த சில ஆண்டு காலத்தில் கவிதை, சிறுகதை, போன்ற இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். சுதந்திரன், வீரகேசரி, தமிழின்பம் ஆகிய சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. 
1951ஆம் ஆண்டு புனித வளனார் கல்லூரியின் மேல் வகுப்பு மாணவர்கள் சிலர் சேர்ந்து அமைத்த தமிழ் கழகம் நடாத்திய திருக்குறள் மகாநாடு பெரும் சிறப்பாக நடைபெற்றது. நீண்டகாலம் செயலாளராக மறைந்த அநு.வை. நாகராஜன் அவர்களும் தலைவராக மறைந்த அதிபர் ரோ. ஸ்ரனிஸ்லொஸ் அவர்களும் கடமையாற்றினர். 1958ஆம் ஆண்டளவில் இவர்கள் நடத்திக்காட்டிய நாடகம் தொடர்பான தகவல் ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது. இக்காலப்பகுதியில் மறைந்த எம். அமீர் சுல்தான் (இளந்தீரன்), பீ.ஏ.சி. ஆனந்தராசா ஆகியோரை ஆசிரியர்காளாக கொண்டு ‘இளைஞர் குரல்” என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது. 
மர்ஹ_ம் எம். அமீர் சுல்தான் (இளந்தீரன்) மட்டக்களப்பு, நாட்டார் பாடல்களை தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டு அது தொடர்பாக ஆக்கங்களை வெளியிட்டு வந்துள்ளார். 1959ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அநுராதபுரம் வாலிப முன்னேற்றக்கழகம் பிற்காலத்தில் பல கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டது. அத்தோடு 1960ஆம் ஆண்டு அநுராதபுரத்தின் முதல் அச்சு சஞ்சிகையான ‘அன்னை” என்ற மும்மாத இதழ் அநு.வை. நாகராஜனை ஆசிரியராக கொண்டு வெளியானது. இங்கு விதந்து குறிப்பிடப்படவேண்யவர் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்டு (25.05.1933) 1940களில் அநுராதபுரத்தை வசிப்பிடமாகவும் 1971வரை 31 ஆண்டுகள் வாழ்விடமாகவும் கொண்ட அமரர் (02.09.2012) இலக்கிய வித்தகர் அநு.வை. நாகராஜன் அவர்களாவர்.  அநுராதபுரத்தில் கல்விகற்று தொழில்பார்த்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் வரை, இவரது கலை, இலக்கிய முயற்சிகள் இப்பகுதி இளந்தளிர்களுக்கு நீர்பாய்ச்சியதாக இருந்தது. ஆன்மீகம், கல்வி, தொல்லியல், வரலாறு, மொழி, இலக்கியம், சிறுவர் இலக்கியம் என பிற்காலத்தில் 16 நூற்களை வெளியிட்டு சாதனை படைத்த இவர் தனது பெயரின் முன்னால், ‘அநு”வைச் சுமந்திருப்பதால் தான் வளர்ந்து மலரத் தொடங்கிய மண்ணை இறுதிவரை மறக்காதிருந்தார் என்பதையிட்டு இப்பகுதி கலை, இலக்கியவாதிகள் பெருமை கொள்கின்றனர். சுகவீனமுற்றும் கூட, மேற்சொல்லப்பட்ட கலை இலக்கிய வடிவங்களை மறக்காது தொண்டாற்றியமையால் இலக்கிய வித்தகர் உட்பட பல்வேறு பட்டங்களும் விருதுகளும் இவருக்கு கிடைத்தன. இவரது நினைவாக இவரது குடும்பத்தினர் ‘நாகராஜஜோதி” என்ற நூலை வெளியிட்டு மறைந்த பின்னும் மறையா நினைவொன்றை பதிவாகத் தந்துள்ளனர். 
பிற்காலத்தில் புலம்பெயர்ந்த, தமிழக எழுத்தாளராகிய ஜோவலன் வாஸ் அன்னை சஞ்சிகையின் துணையாசிரியராக இருந்தார். 1965ஆம் ஆண்டு புனித வளனார் கல்லூரியின் உயிரியல் பட்டதாரி ஆசிரியரான அன்டன் ஞானராஜா அவர்களால் மாணவர் குரல் சஞ்சிகை பொறுப்பாக நின்று வெளியிடப்பட்டது. 65ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட ஐந்தாண்டு காலப்பகுதியில் கையெழுத்துச் சஞ்சிகை முயற்சிகள் வேகமாக நடைபெற்று வந்தன. புதுமை ஒளி, தமிழ்ச் சுடர், கலைமதி, வீரத்தமிழன், பெட்டகம், செங்கொடி, அன்பன் போன்ற கையnழுத்துச் சஞ்சிகைகள் மாதா மாதம் வெளியிடப்பட்டு வந்தன. தமிழ்ச் சுடர் என்ற சஞ்சிகையின் 36வது இதழ் வவுனியா வல்லிபுரம் அச்சகத்துக்கு ஊடாக 1969ஆம் ஆண்டு அச்சுப்பிரதியானது. மேற்படி சஞ்சிகைள் பலவற்றில் இணையாசிரியராக சஞ்சிகைப்பணியில் ஈடுபட்ட அன்பு ஜவஹர்ஷா (தமிழ் வேந்தன்), புரட்சி இளைஞன் என்ற பெயரைக் கொண்டு எழுதி வந்த எம்.ஏ.எம். இப்ராஹிம் அவர்களோடு இணைந்து புத்தொளி என்ற பெயரில் இரண்டு இதழ்கள் வெளியிட்டனர். மேற்சொல்லப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகைகள் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்த பலர் இன்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்களே. இரா. வி. மூர்த்தி, இரா நாகராசன், சிவா தம்பையா, பேனா மனோகரன், ஆ.சி.ஞானம், ஹேமாமாலினி மெய்யழகன், க.குமாரசுவாமி, எஸ்.எச்.எம். சஹிர், எஸ். சேவியர் குலாஸ், இலங்கை மன்னன், அ.மிராண்டா, பெ. ஆறுமுகம் ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆகும். 
ஆசிரியரான இரா நாகராஜன்,  ‘ராவய” தமிழ்;ப்பதிப்பான ஆதவன் ஆசிரியர் பீடத்தில் கடமையாற்றிய ஆ.சி. ஞானம், அநுராதபுரத்தின் முதலாவது சட்டத்தரணியான எஸ்.எம்.எம். சஹிர் ஆகியோர் இன்று நம்மிடையே இல்லாமை வருந்தத்தக்க செய்தியே. 
இப்பிரதேசத்தைப்பிறப்பிடமாக கொண்டு கொழும்பில் வர்ததகத்தில் ஈடுபட்ட வித்தகன் என்ற புனைப்பெயரில் எழுதி வந்த எஸ்.எம்.சாலிஹ் அவரது சிருஷ்டி இலக்கிய வாசகர் வட்டத்தின் சார்பில் ‘பேரறிஞர் அன்னாவின் தேன்துளிகள்” என்று நூலைத் தொகுத்து வெளியிட்டள்ளார். 
1968ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இளம் எழுத்தாளர் சங்கம் இப்பகுதியில் பல இலக்கிய நகர்வுகளை நிகழ்த்தியது. அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் 1971இல் ஆரம்பிக்கபட்ட ‘இளம் தளிர்கள் இலக்கிய வட்டம்” பிறையொளி சஞ்சிகையைத் தொடர்ந்து கல்லச்சுப்பிரதியாகவும் அச்சுப்பிரதியாகவும் வெளியிட்டு வந்துள்ளது. அத்தோடு, இந்த இலக்கிய வட்டத்தால் இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், கவியரங்குள் போன்றன நிகழ்த்தப்பட்டன. 
அநுராதபுரம் இலக்கிய வரலாற்றில் இங்கு குறிப்பிடத்தக்க பணிகளை குறுகிய காலத்தில் அசுரப்பணிகள் ஆற்றிய அநுராதபுரம் கலைச்சங்கம் நூல்வெளியீடு, இலக்கிய சஞ்சிகை வெளியீடு, இலக்கிய கூட்டம், நாடகம் என்ற வகையில் 1972ஆம் ஆண்டு தொடக்கம் 1976ஆம் ஆண்டு வரை பல பணிகளை ஆற்றியுள்ளது. மா.வை. நித்தியானந்தன். க. குமாரசுவாமி ஆகியோரை தலைவராகவும் அன்பு ஜவஹர்ஷா, பேனா மனோகரன் அகியோரை செயலாளர்களாகவும் கொண்டு இயங்கிய நான்கு வருடகாலத்தில் தம்பு சிவா, தங்கரட்ணம், ஆ.சி. ஞானம், எம்.ஏ.எம். இப்றாஹிம், மாத்தளை பாலா. த. குமாரலிங்கம், இரா சுகுன சபேசன், பேனா அறுமுகம் (வரன்), மெய்யழகன், கெமாலினி மெய்யழகன் போன்றவர்களின் கூட்டு முயற்சியால் பின்வரும் இலக்கிய முயற்சிகள் செய்யப்பட்டன. இச்சங்கத்தின் ஆதரவில் களம் என்ற மூன்று மாத சஞ்சிகை 1972ஆம் ஆண்டு தொடக்கம் வெளியிடப்பட்டு வந்தது. இலங்கையின் முதன்முதலாக கவியரங்குக் கவிதைகளை கவியரங்கின் போது தொகுப்பாக வெளியிடும் முயற்சியாக அன்பு ஜவஹர்ஷா ‘சிதைந்து போகும் சிறப்புக்கள்”, என்ற தொகுதியையும் பேனா மனோகரனுடன் சேர்ந்து ‘புத்துலகம் படைப்போம்” தொகுதியையும் 1973ஆம் ஆண்டு வெளியிட்டார். இலங்கையில் பல பாகங்களில் வசிக்கும் புதுக்கவிதையாளர்கள் 44 பேரின் கவிதைகளைத் தொகுத்து ‘பொறிகள்” என்ற பெயரில் அன்பு ஜவஹர்ஷா வெளியிட்டார். இதுவும் இலங்கை புதுக்கவிதை வரலாற்றில் முதன் முயற்சியாகும். 1975ஆம் ஆண்டு, பல்வேறு சஞ்சிகைகளில் வெளியான அன்பு ஜவஹர்ஷாவின் புதுக்கவிதைகள் ‘கவிகளும் ஒட்டுண்ணிகளும்” என்ற பேரில் கலைச்சங்கத்தால் வெளியிடப்பட்டது. 1976ஆம் ஆண்டு, அநுராதபுரத்தைப் பிறப்பிடமாக கொண்டு தற்போது தமிழ்நாடு காவல்துறையில் உதவி காவல் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற பேனா மனோகரினின் புதுக்கவிதைகளைத் தொகுத்து ‘சுமைகள்” என்ற பெயரில் கலைச்சங்கம் வெளியிட்டது. 1970களின் பிற்பகுதியில் இடம்பெற்ற இனப்பிரச்சினைகளின் காரணமாக அநுராதபுரம் கலைச் சங்கத்தின் முயற்சிகளில் ஆர்வமாகப் பணியாற்றிய பலர் அநுராதபுரத்தைவிட்டு புலம்பெயர இச்சங்கத்தின் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்தன. 
இக்காலகட்டத்தில் விமர்சனம், அகவய சிந்தனைகள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்காக இயங்கிய தேன்துளி இலக்கிய வட்டம் பல பயனுள்ள நிகழ்வுகளை மாதா மாதம் நடத்தி வந்தது. அ. யேசுராசாவின் ‘தொலைவும் இருப்பும்”, செங்கை ஆழியானின் ‘வாடைக்காற்று” என்ற நாவல், வன்னியூர் கவிராயரின் ‘ஈழத்து காவிய தீபகம்’ என்ற சிறுகதை தொகுதி போன்ற நூல்கள் தொடர்பாக பல கலந்துரையாடல்களை இவ்வமைப்பு நடத்தியுள்ளது. 
1987ஆம் ஆண்டு எப்.ஆர். பரீட்ஹ் ‘அன்னை” என்ற பெயரில் சஞ்சிகையின் சில இதழ்களை வெளியிட்டார். பின்னார் இவரின் முயற்சியால் குடா நெலுபாவ அல் மதினா முஸ்லிம் வித்தியாலய வெளியீடாக அல் மதீனா என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இலக்கிய அமைப்பு ரீதியாக வெளியீடுகள் நடைபெறாத போதிலும் கல்வி நிறுவனங்கள் கலாசாலை சஞ்சிகைகள் தமது ஆண்டு மலர்களை வெளியிட்டு வந்தன. ஆசிரியர்களுக்காக நடாத்தப்பட்ட தொலைக்கல்வி நிறுவனம் ‘தொலைச்சுடர்” என்ற சஞ்சிகையை ஏ.சி. ஜன்சியை ஆசிரியராக கொண்டு வெளியிட்டது. கனேவல்பொல சமூக அபிவிருத்தி மன்றம் ‘விம்பம்” என்ற சஞ்சிகையையும் ‘விழிப்பு” என்ற மலரையும் வெளியிட்டது. தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த அநுராதபுரம் சாஹிரா மாகா வித்தியாலய சஞ்சிகையான ‘பிறையொளி”, விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய ஆண்டு வெளியிடான விவேகானந்தன், சிறிது காலம் வெளியிடப்பட்ட விவேகி, நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முழுமதி, அழகப் பெருமகம முஸ்லிம் வித்தியாலய சஞ்சிகை, அங்குநொச்சிய முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த சஞ்சிகையான ‘பிரபஞ்சம்” ஆகியற்றில் படைப்பிலக்கியம் நிறைய விடயங்கள் இடம்பெற்றுள்ளன. நாச்சியாதீவுப் பகுதியில் வெளியான ‘;நாச்சியாதீபம், தூரிகை” போன்ற கையnழுத்துச் சஞ்சிகைகளும் குறிப்பிடக் கூடியவைகளாகும். இவைகள் அனைத்தும் எமது பார்வைக்கு கிட்டியமையால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இவைகளை விட வேறு சஞ்சிகைகள், கையெழுத்துபிரதிகளாக வெளியிடப்பட்டிருக்கலாம். இலக்கிய விடயங்களை உள்ளடக்காது. பாடசாலை பாட உள்ளடக்கத்தைக் கொண்டு பாடநூல்கள் பல வெளியிடப்பட்டுள்ளன. இவைகள் கல்வி தொடர்பானவையால் இங்கு குறிப்பிடப்படவில்லை. 
1999ஆம் ஆண்டுக்குப்பின்னர் இப்பகுதியில் நூல், சஞ்சிகைகள் இலக்கிய முயற்சிகள் தொடர்பான அமைப்பு ரீதியிலும்  தனிப்பட்ட ரீதியிலும் வேகமான பல முயற்சிகளும் இடம்பெற்றன. இளம் எழுத்தாளர்களின் ஆர்வம் இங்கு அதிகமாக காணப்படுகின்றது. ஐ. றஹ்மத்துள்ளாவைத் தலைவராகவும், சாஹிரா சரீப்தீனை செயலாளராகவும், நாச்சியாதீவு பர்வீனை அமைப்பாளராகவும் கொண்டு இயங்கிய அநுராதபுரம் கலை இலக்கிய வட்டத்தால், எப்.ஆர். பரீட்ஹ், ஜன்சி கபூர் ஏ.பி.எம். அன்சார், எஸ். சாஜஹான் ஆகியோரை ஆசிரியர்களாகவும் கொண்டு ‘அநுராகம்” என்ற கலை இலக்கிய மும்மாத சஞ்சிகையின் 6 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.எஸ். ஷர்மிலா பேகத்தை ஆசிரியராகவும், எல். வஸீம் அக்ரத்தை உதவியாசிரியராகவும், எம்.சி. நஜிமுதீன், ஜே.எம். சமான், எம்.ஐ. பிர்னாஸ், எம். சஹரின் அஹமட் ஆகியோரை சஞ்சிகை குழுவாகவும் கொண்டு அநுராதபுரம் நட்சத்திர நற்பணி மன்றம் என்ற அமைப்பு படிகள் என்ற சஞ்சிகை வெளியிட்டது. இன்று எல்.வஸீம் அக்ரத்தை ஆசிரியராகவும், எம்.சீ. நஜிமுதீனை உதவி ஆசிரியராகவும் கொண்டு அநுராதபுரம் நண்பர்கள் இலக்கிய குழு வெளியீடாக படிகள் சஞ்சிகையை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்றது. படிகள் சஞ்சிகையே இப்பகுதியில் இன்று தொடர்ந்து வெளியிடப்படுகின்ற ஆர்வமுள்ள இலக்கிய முயற்சியின் வெளிப்பாடாக குறிப்பிடலாம். இப்பிரதேச எழுத்தாளர் ஆக்கங்களோடு, வேறு பிரதேச பிரபல எழுத்தாளர்களின் ஆக்கங்களுடனும் சிறப்பான மறுபிரசுரங்களுடனும் இச்சஞ்சிகை வெளியிடப்பட்டுவருகின்றது.  ஒவ்வொரு சஞ்சிகையிலும் இலங்கையில் உள்ள பிரபலமான கலை, இலக்கிய வரலாற்று ஆய்வாரளின் நேர்காணல்கள் இடம்பெற்று படிகள் சஞ்சிகைக்கு கனதியைச் சேர்த்து வருகின்றன. அநுராகம், படிகள் போன்ற சஞ்சிகைகள் வெளிவந்த காலத்தில் ஏ.பி.எம். அன்சாரை அசிரியராக கொண்டு கஹடகஸ்திகிலிய பிரதேசத்திலிருந்து ‘தாகம்’; என்ற சஞ்சிகையும், ஆர்.எம். தாரிக் அவர்களை ஆசிரியராக கொண்டு அநுராதபுரத்திலிருந்து தூறல் என்ற சஞ்சிகையும் வெளிவந்தது. அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய மாணவ விடுதி வெளியீடாக ‘பார்” ‘தென்றல்” ஆகிய சஞ்சிகைள் வெளிவந்துள்ளன. 2013ஆம் ஆண்டு எம்.சீ. சபூர்தீன், நேகம பஸான், ஆகியோரை ஆசிரியர்களாக கொண்டு ‘அநுராதபுரம் மாவட்ட அடையாளம்” என்ற பெயரில் கல்வித் துறைத் தொடர்பான தகவல்கள், பாடசாலைச் செய்திகள் போன்றன இடம்பெற்று வருகின்றன. 
அநுராதபுரம் மாவட்ட இலக்கிய வளர்ச்சி பற்றிப் பேசும் போது, மறக்கவும் மறைக்கவும் முடியாத இரண்டு சகோதரிகள் இருக்கின்றார்கள். கடந்த 25வருட காலமாக கெகிராவ ஸஹானா, கெக்கிராவ ஸ_லைஹா ஆகியோரின் பங்களிப்பும் நூல் வெளியீடுகளும் விதந்துரைக்கத்தக்கவை. சித்தி ஜஹானரா என்ற இயற்பெயர் கொண்ட கெக்கிராவ ஸஹானா 1980ஆம் ஆண்டுகளில் வானொலி மூலம் எழுதத் தொடங்கினார். 1989ஆம் ஆண்டு மல்லிகையில் வெளியான இவரது முதல் சிறுகதைக்கு தகவம் பரிசு கிடைத்தது. அநுராதபுரம் மாவட்டத்தின் முதலாவது சிறுகதைத் தொகுதி என்று குறிப்பிடத்தக்க பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாழ்த்துரையோடு வெளியான ‘ஒரு தேவதைக் கனவு” என்ற சிறுகதைத் தொகுதி 1996ஆம் ஆண்டு வெளியானது. அடுத்து 2002ஆம் அண்டு கவிஞர் வைரமுத்துவின் அணிந்துரையோடு ‘இன்றைய வண்ணத்துப் பூச்சிகள்” என்ற கவிதைத் தொகுதி வெளியானது. 2009ஆம் ஆண்டு ‘ஒரு கூடும் இரு முட்டைகளும்” என்ற குறு நாவல் இவரால் வெளியிடப்பட்டது. ஜெயகாந்தன் என்ற எழுத்துலக ஜம்பவான் பற்றி அவருடைய படைப்புக்கள் தொடர்பான ஆய்வு வித்தியாசமான கோணத்தில் ‘சூழ ஓடும் நதி” என்ற பெயரில் வெளியானது. 2011ஆம் ஆண்டு ‘இருட்தேர்” என்ற கவிதைத் தொகுதியும் ‘மானசஞ்சாரம்” என்ற சுயவரலாறும் வெளியிடப்பட்டது. 2012ஆம் ஆண்டு ‘முடிவில் தொடங்கும் கதைகள்” சிறுகதைத் தொகுதி வெளியானது. இவருக்கு கிடைத்த பரிசுகளும் பாராட்டுகளும் பல உள்ளன. 
ஸ_லைஹா பேகம் என்ற இயற்பெயர் கொண்ட கெக்கிராவ ஸ_லைஹா 1980ஆம் ஆண்டு எழுத்துலகில் பிரவேசித்தார். ஆங்கில ஆசிரியையான இவரது இலக்கிய முயற்சிகள் பெரும்பாலும் நல்ல படைப்புக்களைத் தேடி மொழியெர்த்து தமிழில் தருவதாகவே இருந்தது. 2009ஆம் ஆண்டு ‘பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும்” என்ற இவரது முதலாவது மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி வெளியானது. இதற்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய மண்டலப்பரிசு கிடைத்தது இங்கு குறிப்பிடத்தக்கவிடயமாகும். இம்மாவட்டத்தில் இருந்து சாஹித்திய மண்டலப்பரிசு பெற்ற முதலாவது எழுத்தாளர் இவராவர். 2010ஆம் ஆண்டு ‘அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு” என்ற முதலாவது மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல் வெளியானது. 2011ஆம் ஆண்டு ‘இந்த நிலம் எனது” என்ற மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி பிரசுரிக்கப்பட்டது. இவரால் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள் ‘வானம்பாடியும் ரோஜாவும்” என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. 
அண்மைக்கால அநுராதபுரம் இலக்கிய வெளியீடுகளுக்கு கணனி அடிநாதமாக இயங்கிவந்த எம்.ஏ.எம். டில்சானை தலைவராக கொண்டு இயங்கி வந்த ‘ப்ரிஸ்ம்;” என்ற சமூக அபிவிருத்தி அமைப்பு ப்ரிசும் என்ற கல்விச் சஞ்சிகைய வெளியிட்டுள்ளதோடு, நாச்சியாதீவு பர்வீன் கவிதைகளை ‘சிரட்டையும் மண்ணும்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. நாச்சியாதீவு பர்வீனின் (இலக்கியம் மற்றும் இலக்கிய சாராத)  மல்லிகையில் வெளிவந்த கட்டுரைகள் ‘பேனாவால் பேசுகிறேன்” என்ற தலைப்பில் மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்ததுடன், இவரின் ‘மனவெளியின் பிரதி” என்ற கவிதைத் தொகுதி கொடகே வெளியீடாக வெளிவந்துள்ளது. மறைந்த பல்துறைக் கலைஞர் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களின் நினைவுக் கவிதைகளை ‘புதுப்புனல்” என்ற பெயரில் நாச்சியாதீவு பர்வீன், திருமதி பஸ்மினா அன்சார் ரிபாக்குடன் சேர்ந்து தொகுத்து சிந்தனை வட்டத்தின் 150 ஆவது வெளியீடாக வெளியிடப்பட்டது. பல்வேறு இலக்கிய கௌரவங்களையும் ஈட்டியுள்ளார். 
படிகள் (பதிப்பகம்) சஞ்சிகை, ‘வேலிகளைத் தாண்டும் வேர்கள்” என்ற அநுராதபுரம் தமிழ்க் கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டது. இதன் தொகுப்பாசிரியர்களாக நாச்சியாதீவு பர்வீன், எல். வஸீம் அக்ரம் ஆகியோர் இருந்தனர். இத்தொகுதியில் அன்பு ஜவஹர்ஷா, பேனா மனோகரன், கெக்கிராவ ஸஹானா, நாச்சியாதீவு பர்வீன், கெக்கிராவ ஸ_லைஹா, எம்.சி.ரஸ்மின், அநுராதபுரம் ரஹ்மதுள்ளா, எல். வஸீம் அக்ரம், அநுராதபுரம் சமான் ஆகியோர்களின் கவிதைகள்  தொகுக்கப்பட்டிருந்தது. அண்மையில் மிஹிந்தலை ஏ. பாரிஸின் சடலத்தின் வேண்டுதல் என்ற கவிதைத் தொகுதி படிகள் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. 
ஜீவநதி வெளியீடாக வெளிவந்த யாழ், மன்னார், அநுராதபுரம் ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்த் கவிஞர்களின் கவிதைத் தொகுதியில் கெகிறாவ ஸஹானா, கெகிறாவ ஸ_லைஹா, நாச்சியாதீவு பர்வீன், ஜன்சி கபூர், மிப்ராஸ் இஸ்மாயில், ரிஸ்னா ரசீன், நிசாம் பாருக், வஸீம் அக்ரம், சஹ்ரின் அஹமட், நேகம பஸான் ஆகிய அநுராதபுரத்தைச் சேர்ந்த பத்து கவிஞர்களின் 20கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தொகுதியின் தொகுப்பாசிரியர்களுள் நாச்சியாதீவு பர்வீனும் ஒருவராவார்.
மல்லிகையின் 330வது வெளியீடாக 2006ஆம் ஆண்டு அநுராதபுரம் பிரதேச சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. இது அநுராதபுர மாவட்ட கலை இலக்கியப் படைப்பாளிகளுக்கும் பிரதேச இலக்கியத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளத்தை வழங்கியிருந்தது. 
நேகம பிஸ்ரினின் ஊடகம் சார்ந்த நூல் ஒன்று வெளிவந்துள்ளது. முக்கிரியாவ எம்.எம். ரசீம் தனது பட்டப்படிப்பிற்காக செய்த ஆய்வில் 1990களின் பின்னர் அநுராதபுர மாவட்ட இலக்கிய நகர்வுகள் என்ற கட்டுரையில் சில பகுதிகள் படிகள் சஞ்சிகையில் தொடராக வெளியிடப் பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற பிரதேச இலக்கிய ஆய்வரங்கில் ‘வடமேல் வடமத்திய மாகாண இலக்கியங்கள்”என்ற தலைப்பில் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் ஆற்றிய ஆய்வுரை இப்பிரதேச இலக்கிய முயற்சிகளுக்கு சிறந்த அங்கீகாரமாகவும், ஊன்றுகோலாகவும் இருந்தமை இங்கு குறித்துக்காட்டத் தக்கதாகும். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இப்பகுதியில் நடைபெற்றுவரும் இலக்கிய முயற்சிகள் தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வாளரால் ஆவணமாக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இதனைக் குறிப்பிடலாம். 
இந்த மண்ணின் பின்தங்கிய கிராமம் ஒன்றை மையமாக கொண்டு மல்லிகைப்பந்தல் வெளியிடாக வெளியிவந்துள்ள ஒரு காலத்தில் இப்பிரதேசத்தில் ஆசிரியராக கடiமாயற்றிய ப.ஆப்தீன் எழுதிய ‘கருக்கொண்ட மேகங்கள்” என்ற நாவல் இப்பிரதேசத்தின் முதல் நாவலாக உரிமை கொண்டாடுவதில் தவறு இருக்க முடியாது என்று எண்ணுகிறேன். 
இப்பிரதேச கலை இலக்கியவாதிகளில்  மிகவும் குறிப்பிடத்தக்கவரான ஹொரவப்பத்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த எம். சீ. ரஸ்மின் ‘நாளையும் மற்றொருநாள்” (கவிதை - 2008), சின்னவனும் நண்பர்களும் (இளைஞர் நாவல் - 2008), முன்மாதிரி (இளைஞர் நாவல் - 2009), ஊரடங்குச் சட்டம் (சிறுகதை  - 2009) உள்ளிட்ட 8 நூல்களை சிங்கள மொழியிலிருந்து தந்துள்ளார். இவர் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளிநாடுகளில் இடம்பெற்ற சர்வதேச மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார். அபிவிருத்திக்கான ஒலிபரப்பு, வானொலி நாடகம், பன்மைத்துவத்திற்கான ஒலிபரப்பு, ஒலிபரப்பு மொழியியல் மற்றும் பால் நிலையும் ஒலிபரப்பும் ஆகிய துறைகளில் ஈடுபட்டுவருகின்றார். சமூகவானொலி - மனித வலுவாக்கத்திற்கான ஊடகம் (2012) என்ற ஆய்வு நூலையும், போர்க்கால சிங்கள இலக்கியங்கள் - ஓர் பன்மைத்தவ ஆய்வு என்ற நூலையும் அண்மையில் வெளியிட்டுள்ளார். ரஸ்மின் இதுவரை சுமார் 150ற்கும் அதிகமான நாடகங்களை எழுதியுள்ளார். எனவேதான் அப்படி (2008), ஜீவன் வந்து சேரும் வரை (2009), சொர்க்கமே என்றாலும் (2010), மௌனத்தின் புன்னகை (2011), யாவரும் கேளிர் (2012) ஆகிய தொடர் நாடகங்களையும் நாடகத் தொடர்களையும் தயாரித்து வழங்கியுள்ளார். வானொலி நாடகம் மற்றும் சமூக வலுவாக்கம் தொடர்பான சர்வதேசப் பயிற்சி நெறிகளில் வளவாளராகவும் பங்குபற்றி வருகின்றார். 
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அநுராதபுரம் பிரதேச இலக்கியத்திற்கும் விலாசத்திற்கும் தமிழ் இலக்கிய உலகில் ஆழமான பதிவொன்றை உண்டாக்கிவரும் படிகள் சஞ்சிகையின் ஆசிரியர் எல். வஸீம் அக்ரம் அவர்களின் இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒன்று ‘மண்ணில் துழாவும் மனது” அடுத்தது. ‘ஆக்கிரமிப்பின் கால் தடம்”. இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்தில் (2006 - 2009) தமிழ்ச் சங்க வெளியீடுகளான களவட்டி (ஆய்விதழ்), மரங்கொத்தி (கவிதை இதழ்) ஆகியவற்றின் இணையாசிரியராகவும் மாணவர் பேரவையின் செயலாளராக செயற்பட்ட காலங்களில் வெள்ளிச்சிறகு, எழுதுகோல் ஆகிய வெளியீடுகளின் ஆசிரியராகவும் கலை இலக்கியப் பங்காற்றியுள்ளார். 
படிகள் சஞ்சிகையின் உதவியாசிரியராக இருந்து வருகின்ற எம்.சி. நஜிமுதீன் 2010ஆம் ஆண்டு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சும் இளைஞர்கள் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்திய தேசிய இளைஞர்கள் நாடகப் போட்டியில் எம்.சி. நஜிமுதீன் தயாரித்த ‘கலைந்த கனவு” நாடகம் தேசிய ரீதியில் மூன்று விருதுகளைப் பெற்றுக் கொண்டது. குறித்த நாடகத்தின் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த எம்.சி. நஜிமுதீன் தேசிய ரீதியில் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுக் கொண்டார். 2011 ஆம் ஆண்டு இதே அமைச்சின் கீழ் நடந்த தேசிய போட்டியில் எம்.சி. நஜிமுதீன் தயாரித்த ‘சலோமி” என்ற நாடகம் ஏழு விருதுகளைப் பெற்றுக் கொண்டது. அத்துடன் குறித்த நாடகம் இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையில் வடக்குக் கிழக்கு உட்பட பதினொரு மாவட்டங்களில் மூப்பதுக்கு மேற்பட்ட இடங்களில் மேடையேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த ஆண்டில் கலாசார கலை அலுவல்கள் அமைச்சு கலாசார திணைக்களம், இளங்கை கலை கழகத்தின் நாடக குழு என்பன இணைந்து நடத்திய அரச நாடக விழாவில் மூன்று விருதுகளைப் பெற்றுக் கொண்;டமையும் குறிப்பிடத்தகக்கது. 2012ஆம் ஆண்டு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சும் இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்திய தேசிய இளைஞர் நாடகப் போட்டியில் எம்.சி. நஜிமுதீன் தயாரித்தளித்த ‘அவன் போட்ட கணக்கு”நாடகம் ஒன்பது விருதுகளைப் பெற்றுக் கொண்டது. அந்த நாடகத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்த எம்.சி. நஜிமுதீன் நடிகருக்கான ஜூரர் சபை விருது பெற்றதுடன் சிறந்த இயக்குனருக்குமான விருதையும் பெற்றுக் கொண்டார். 2011ஆம் ஆண்டு நடந்த இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு நடாத்திய சிறுகதைப் போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடமும் அதே ஆண்டு கலாசார அலுவல்கள் அமைச்சு நடாத்திய சிறுகதைப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடமும் 2012ஆம் ஆண்டு தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் நடாத்திய ‘வியர்வையின் ஓவியம்” சிறுகதைப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடமும் 2013 வடலி அமைப்பு தினக்குரலுடன் இணைந்து நடாத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசும் பெற்றுள்ளார். அவ்வாறே 2012ஆம் ஆண்டு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு நடாத்திய அறிவிப்பு போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார். 
இங்கு பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்த தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த பின்னர், இம்மாவட்டத்தில் உள்ள 64 முஸ்லிம், தமிழ் பாடசாலைகள் திமிழ் தின விழாக்கள், கல்லூரி வெளியீடுகள் போன்றவற்றின் ஊடாக இலக்கிய நிகழ்வுகள் தொடர்கின்றன. 
2014.09.01 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக