பதிவுகள்

  • www.wasimakrampage.blogspot.com - padihal@yahoo.com - padihal@gmail.com

படிகள் 31 - ஆளுமை

அகவை 75ல் தேசத்தின் கண் மானா மகீன் - கலைச் செல்வன்


வரலாறு என்பது விண்மீன்களுக்கான வெளிச்சம் அல்ல.
விடியல்களுக்கான வெளிச்சப்பிழம்புகள், இது வெறும் விளம்பரம் அல்ல. துலாம்பரம் - துலாபாரம் ஆற்றலின் அறுவடை ஆளுமைக்கான பொற்குடை! சுவடுகள் பதித்த சூரியனின் சரித்திரம். கண்டெடுத்த புதையலின் சூத்திரம். இங்கே உங்கள் விழிமேய்ச்சலுக்காக என் நினைவுக் கேமிராவினால் படம் பிடித்திருப்பது வரலாற்றில் வாழும் என் காதலுக்குரிய கதாநாயகனைத்தான்.

அந்த நாயகன் யார் தெரியுமா?
சமத்காரங்களினால் சாதனைப் படைக்கும் தமிழ்மணி மானா மக்கீன் தான். இவருக்கு கிடைத்த அரச சாஹித்திய உயர்விருது 'தேசத்தின் கண்;' இதனால் பலருக்கு தேகத்தில் புண். இந்த அமானுஷ்ய புத்திரனால் இலக்கியபூமிக்கும் புரவலர்கள் பலர் அறிமுகம். அதனால் பழைய புதிய படைப்பாளிகளுக்கும் ஏறுமுகம். எனக்கும் கலைத்துறைக்கும் உள்ள தொடர்பும், எனக்கும் 'எம்திரி'க்கும் உள்ள உறவும் அரைநூற்றாண்டுக்கும் மேல், அது ஆலம்விழுதுகள் போல் அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் கறுப்புக்கண்ணாடிக் காரரின் 'கல்கண்டு' இவர் கண்களைத் தழுவாதிருந்தால்...

அப்பொழுது பட்டித் தொட்டியங்கும் பட்டொளி வீசிய 'ரெடிபியூசன்' என்ற வானொலிப் பெட்டியில் ஒலிபரப்பான 'சிறுவர் மலர்' இந்த இளவயசுக்காரரின் இதயத்தில் இடம் பிடிக்காதிருந்தால்... எம்.எம்.மக்கீன் என்ற மானா மக்கீனை கலை யுலகம் காணாது போயிருக்கும். இலக்கியத்துறையும் இதயமற்ற இயந்திரமாயிருக்கும். ஊடகங்களுக் குள்ளும் ஊட்டச்சத்து குறைந்து போயிருக்கும் அன்றைய பதினொரு வயதுக்கார சிறுவன் தான், இன்று ஆற்ற சபையில் நூற்றொருவராக அகவை எழுபத்தைந்தைக் கொண்ட இளைஞனாகத் திகழும் எங்கள் தமிழ்மணி. ஆற்றல் வயலின் அற்புத விளைச்சலான நெல்மணி.

அதனாலன்றோ...
திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் தமிழகப் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களால் வழங்கப்பட்ட 'ஆய்வுத் தமிழ் ஆற்றுநர்' எனும் கௌரவம். ஒரு காலத்தில், நான் ஒரு இலக்கியக்காரனாக வரவேண்டும் என்பது மானாவின் அவா. மானா ஒரு கலைஞனாக திகழவேண்டும் என்பது என்னுடைய ஆசை. காலம் வேறுவிதமாக தீர்மானித்தது. பொன் விழாவையும் கடந்த இலக்கிய வாதியாக அவர் கலைஞனாக நான். என் பிள்ளைத் தமிழக்கு முதல் தொட்டிலைக்கட்டியவராக மானா, அவரது நாடக கேள்விகளுக்கு கரம் கொடுத்த கொடிமரமாக நான், இதுவே எங்களுக்குள் இருக்கும் ஆழம் காண முடியாததோர் ஆத்மதிருப்தி. இன்னொரு வகையில் பதியம் போட்டால் இது தான் எங்கள் இருவரினதும் ஆத்மபலம். இருக்க முடியும்?

அத்தோடு விட்டாரா இந்த அஷகாய சூரர் ?
சிங்கள நாடகத்துறையின் வளர்ச் சிக்குக் காரணமான முன்னோடி களில் ஒருவரான தயானந்த குணரத்ன இயக்கி அரச நாடக விழாவில் விருதுகள் பெற்ற 'இபிகட்ட' (ஆமை ஓடு) எனும் பிரபலமான நாடகத்தை 'கிளாரிகல் கிளாஸ்த்ரி' எனும் பெயரில் தமிழக்குத் தந்தார் 'எம்த்ரி' வெள்ளவத்தையில் அந்நாளில் இருந்த விமலா உதயனன் புரொடக் சன்ஸ் என்ற நாடக அமைப்பினரே இந்நாடகத்தை தயாரித்து இருந்தார் கள். தமிழ் - சிங்கள  முஸ்லிம் கலையுணர்வுக்கும், புரிந்துணர் வுக்கும் நாடகத்தின் மூலம் பாலம் அமைத்த இவரை பிறைநிலாவாகப் பார்க்கவில்லை. இவரை ஒரு பூரணச் சந்திரனாகவே புரிந்து கொள்கிறேன்.

இதன் பின்னும் தேசிய தமிழ் நாடக விழாவில், காலஞ்சென்ற நாடக ஆசிரியர் எம்.எச்.பௌசுல் அமீரின் 'தேட்டத்துராணி' இவரது இயக்கத்தில் அரங்கேறியதோடு, சிங்கள மேடையில் 'பல்கீஸ் நோனா' வாகவும் வரச்செய்தார். கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் ஆனந்தா புரொடக்ஷன்ஸ் நாடு பூராகவும் அரங்கேற்றிய தாலிக் கொடி நாடகத்தின் இயக்குனரும் இவரேயாவார்.

இப்படி ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் சிங்களத்திற்கும், சிங்களத்தில் இருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து சிங்களத்திற்கும் நாடகங்களை கொண்டு சென்றதன் மூலம் அர்த்தமுள்ள நாடக அரங் கை அகலப்படுத்தி இருக்கிறார். மூலையிலே முடங்கிக் கிடந்த கலைஞர்களுக்கு மூளைச் சலவை  செய்திருக்கிறார். தினகரன் தமிழ் நாடக விழா  1969இல் ஆறு விருதுகளை வென்ற எனது 'மனித தர்மம்' நாடகத்தில் ஒளி அமைப் பாளராகவும், சிகரம் தொட்ட என் நாடக முயற்சிகளுக்கு வழிசமைத்த வராகவும் எனக்குத் துணைநின்ற மானாவை எப் போதும் நான் நினைப்பதுண்டு. வந்த வழி மறந்தவர்களுக்கு வரலாற்றில் ஏது இடம் ?

கலைத்துறையில் மானாவின் பயணம் 15 ஆண்டுகள்தான். ஆனால் அவை பயனுள்ள ஆண்டுகள். குறைவான காலங்களில் நிறைவான சாதனைகள் அவர் உடையது. 'முது கலைஞர்' விருதிற்கு அது மட்டுமே போது மானது (முகமும் முகவரியும் இல்லாமல் முது கலைஞர்களாக தங்களை வரித்துக் கொண்டுள்ள வர்கள் முழுமனதோடு என்னை மன்னிப்பார்களாக )

அப்பொழுதெல்லாம் அவர் 'மானாவாக' பரிணமிக்க வில்லை. அனைத்திலும் எம்.எம்.மக்கீன் என்றுதான் பரிமாணமளித்தார் என் பதையும் நாம் மறந்து விட முடியாது. கலைத்துறையைவிட்டு இலக்கியத் துறையில் அவர் பயணித்ததால் தான் கடல் கடந்த நாடுகளில் எல்லாம் அவர் புகழ் துவங்கியது. புலமைத் துலங்கியது. அவரது வசிய வார்த் தைகள் பூக்களைக் கூட பூப்படையச் செய்யும்.

மானாவின் பல பரிமாணங்களை காகிதத் தட்டுப்பாடு கருதி இடை நிறுத்தம் செய்தாலும் இரண்டு விஷயங்களை சொல்லித்தான் ஆக வேண்டும். ஓன்று மேடை பங்களிப்புகளுக்கு மத்தியில் 'நிலா' என்ற சிற்றிதழை ஓராண்டு காலம் மாதம் இரு முறையாக நடத்தியது. அந்த அதிசயம் இன்றும் என்னை வியக்க வைக்கிறது.
இருண்டாவது... பத்தி எழுத்துக் களுடன் பலதரப்பட்ட பழரசத் தகவல்களுடன் ஒரு முழுப்பக்க மாகத் தொடர்ந்து நான்காண்டு களாக 'லைட்ரீடிங்' தினகரனில் பிரசுமானது. இந்த விசித்திரம் இப்போது வியர்க்கவைக்கிறது.  

நான் 'நிலா' வை ரசித்தவன். 'லைட்ரீடிங்'கை ருசித்தவன் இரண்டும் நின்று போனது காலத் தின் விதியா? கருத்துக் குருடர்களின் சதியா? இறைவனே அறிவான் எனினும் நதியை குளத்தினுள் மூழ்கடிக்க முடியவில்லை.

தமிழ்மணி ஒரு நதி. அதுவும் மகாநதி. எது நடந்தாலும் எப்படி நடந்தாலும் எட்டுத்திசையும் மானாவுக்கு வெற்றி திசைதான்.

நம் கைரேகைகளில் நமது சரித்திரம் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அது உண்மையோ, பொய்யோ? ஆனால் இவரது விரல்களுக்கு ஒரு சரித்திரம் உண்டு. காரணம்? சூரியச் சொற்களால் சாறு பிழியும் வித்தையை இவர் விரல்கள் கற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை உறுதிப்படுத்துகிறது ஐந்தாண்டு களுக்கு முன்னர், எழுபதாம் அகவை விழாவின் போது இளை யான்குடியிலிருந்து பொற்கிழி கவிஞர் மு.சண்முகம் எழுதிய கந்தகவரிகள்.

ஈழம் தந்த வேழம்-அந்த
ஈர மண்ணின்
புன்னகைக்கும் சோளம்
எழுபது வயதான
நிலவு - இவர்
எல்லாத் தமிழருக்கும்
உறவு

இந்த உறவு நிலைக்க, இலக்கிய உறவு தழைக்க அகவை 75 இல் தடம் பதிக்கும் 'மானா' மக்கீன் அவர்கள், இன்ஷா அல்லாஹ் இன்னும் 75 ஆண்டுகள் வாழ்க வளமுடன் வல்ல நாயகன் அருளுடன். எனக்குள் எப்போ திருந்தோ ஓர் ஆசை, எனது உணர்வுத் தூரிகையால் மங்காத வர்ணங்களினால் ஓசையில்லா ஓசையின் ஓவியத்தை தீட்ட வேண்டும் என்பது. அந்த ஓவியத் தைத்தான் உங்கள் பார்வைக்குப் பதியம் போட்டு இருக்கிறேன் இன்று.

என்னை இயக்கும் இறைவனுக்கே எல்லாப் புகழும்.

படிகள் 31 - ஆளுமை

சிங்கள சினிமாவில் அசோக்க ஹந்தமக - எல். வஸீம் அக்ரம்

ஒளி ஊடகத்தை தனது பிரதான ஆயுதமாக ஏற்றுக் கொண்ட ஆசோக்க ஹந்தகம, சினிமா உலகிற்கு அறிமுகம் தேவையில்லாத ஒரு இயக்குனர். கடந்த 20 வருடங்களாக சிங்களச் சினிமாச் சூழலில் தவிர்க்க முடியாதவர் மட்டுமின்றி அதிக சர்ச்சைகளுக்கும் கேள்விகளுக்குமுட்பட்டவர்.

1992ல் இவரது முதலாவது திரைப்படமான 'சந்த கிணர' (ஆழழn டுயனல) தயாராகிக் கொண்டிருந்தது. அந்த திரைப்படம் அந்தந்த ஆண்டகளில் வெளியாகிக் கொண்டிருந்த ஏனைய திரைப்படங்களின் ஆக்கிரமிப்பினால் தனது இடத்தை அடைந்து கொள்ள முடியாமல் சுமார் ஆறு வருடகால இடைவெளிக்குப் பின் 1998ம் ஆண்டு வெளிவருகின்றது.

அதுவரை அசோக்க ஹந்தகமவை அவரது பல்கலைக்கழக மாணவ நண்பர்களைத் தவிர வேறு யாரும் இவரை ஒரு சினிமா சிருஷ்டி என்று அறிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை.

சந்த கிணர திரைப்படம் வெளிவந்து சில நாட்களுக்குள் ஹந்தகமவை முழுமையான, ஒரு ஒளி ஊடக செயற்பாட்டாளராக சர்வதேசமெங்கும் வரையறுத்துக் கொண்டனர். இவரை வெறுமனே உள்ள இயக்குனராக அன்றி சினிமாவில் குறிப்பாக மாற்றுச் சினிமாவில் முக்கிய ஒரு பிரதிநிதியாக உலகம் அடையாளம் கண்டு கொண்டது. சினிமாவுக்குள் தொடர்ச்சியாக கதையாடல்களுக்குட்பட்டு வருகின்ற அடையாளவாதம், யதார்த்த வாதம் போன்ற விடயங்களை தனது ஒளிப்டிமங்களால் குறிப்பாக சினிமாச்சித்திரங்ளாக நமது புலன்களுக்கு ஊடாக ஆகர்சிக்கின்ற பணியை ஹந்தகமவின் இந்த 20வருட கால வாழ்வு செயற்படுத்தியிருக்கின்றது.
சினிமா ஊடகத்தின் பொறுப்பை மிகவும் வலிமையாக பயன்படுத்தி அதன் பெறுபேறுகளை சமூகச் சிதைவுகளில், சமூகக் கட்டமைப் புகளில் ஒப்பிட்டுப் பார்க்கின்ற ஒரு போராட்டத்தை ஹந்தகமவின் சினிமா உலகு நிர்மானம் செய் துள்ளது. சினிமா என்ற ஒரு காட்சி ஊடகத்திலிருந்து அவர் தனது சமூகம் மீதான ஆழ்ந்த பிரக் ஞையை, கதையாடலை, இருப்பை மற்றும் எதிர்வு கூறலை சாத்திய மாக்க முடிந்துள்ளது.

சத்தியமாக ஹந்தகம சினிமா ஜாம்பவான் என்ற கீர்த்திக் கிரிடங் களால் முடிசூட்டப் பட்டாலும் அதே தளத்தில் அதிகப்படியான விமரிசனங்களுக்குள்ளும் விவாதங் களுக்குள்ளும் தாக்கங்களுக்குள்ளும் ஆட்பட்டிருக் கின்றார்.

சமூகத்தில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்துகின்ற சக்தி சினிமா என்ற கலைக்கு இருக்கின்றது. அதற்குள் கவிதை, இலக்கியம், சமூகம், நாகரீகம், ஓவியம், விமரிசனம், இசை, சமயம், விழிப்புணர்ச்சி, பாலியல், பொருளியல், அரசியல் என்ற எண்ணற்ற அணுப் பிரலயங்கள் கூடுகட்டியுள்ளன. இவ்வெண்ணக் கருக்கலின் ஒட்டுமொத்த வெடிப்பு சினிமா. சினிமாவின் ஒவ்வொரு அசைவு களிலும் எனது இருப்பைத் தேடுகிறேன். எனது சுயத்தை தேடுகிறேன் என்கிறார் திரு. ஹந்தகம.

நான் மக்களது வரம்புகளுக்குள் ஒரு சினிமாக்காரன் என்ற அடையாளத்தை பெற்ற போதும், நான் எவ்வகையான சினிமாக் காரன் என்ற வினா என்னை வாழ்நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கின்றது. சமூகத்தின் ஒரு புறக் கண்ணாடியைக் கொண்டு எனது நோக்கையும், எனது அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்துவது எனது உருவாக்கத்தின் பின்னணி ஆகும்.

இது உண்மையில் ஒரு விளையாட்டு.  சமூகத் தினுட னான விளையாட்டு, அரசிய லுடனான விளையாட்டு, இன் னொரு முறையில் சொல்வ தாயின் சமூகத்தின் அசைவுகளு டனான ஒரு யுத்தம் சினிமா வாகும். நான் சினிமா என்ற ஒரு நுண் கலையின் அல்லது ஒரு உயிரூட்டியின் தன்மைகளை அதன் சொரூ பங்களில் இருந்து தான் வெளிப்படுத்த துணிகிறேன். மாறாக சடவாத சம்பிரதாயங்களில் இருந்தல்ல. குறிப்பாக சமூகம் ஒரு அறியாமைச் சுமையை சுமக்க எத்தனிக்கிறது என்றால், அதற்கு ஒத்தடம் கொடுக்க எனது சினிமா சிரம் சாய்க்காது என்கிறார் ஹந்தகம.


சினிமாவை அவர் ஒரு வெற்றுச் சட்டமாக பார்க்காது தமது விவ ரணங்களை அனுப்புகின்ற ஒரு பிரதான மூலமாகப் பார்க்கின்றார். ஹந்தகமவின் சினிமா அவரின் நேரடி ஆக்கிரமிப்புக்களால் ஏற் பட்ட காயங்களா? என்ற வினாவை அவரிடம் கேட்கத் தோனுகிறது.

இவரின் இரண்டாவது திரைப்படம் 'மே மகே சந்த' (வுhளை ஐள ஆல ஆழழn) இது எனது நிலவு 2000ம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படம் தமிழ் சிங்கள உறவு பற்றி பேசுகின்றது. இந்தத் திரைப்படம் 2002ம் ஆண்டுகளில் இலங்கையில் இருந்த யுத்தம், சமாதானம், முரண்பாடு, இனவாதம் உள்ளிட்ட அம்சங் களைப் பற்றி நேர்த்தி மிகுந்த பாணியில் பேசுகின்றது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த 'தனி தட்டுவென் பியாம்பன்ன' - 2002. (ஒற்றை சிறகுகளால் பறத்தல்) என்ற திரைப்படம் பெண்ணியம் பற்றிப் பேசுகின்றது. ஒரு பெண் இரண்டு நிலை சார்ந்த பார்வைகளால் அவதி யுருவதும் அவளது எண்ணங்கள் சமூகத்தின் மத்தியில் தோல்வி யடைவதும் இந்தப் படத்தின் கதைக்கருவாகும். அதாவது ஓரினச் சேர்க்கை இதன் முக்கிய குறியாகும்.


2005 ம் ஆண்டு ஹந்தகமவின் தணிக்கைக்கு உட்பட்ட படம் 'அக்சரய' (யு டுநவவநச ழக குசைந) இத் திரைப்படத்தில் உள்ள காட்சிகள் தாய்க்கும் சேய்க்கும் இடையில் இருக்கின்ற பரஸ்பரத்தைப் பற்றிப் பேசுகின்றது என்ற வாதம் ஹந்தகமவால் முன்வைக்கப்பட்ட போதும், அது பாலியல் கருத்தைப் பதிவு செய்கின்றது என்ற வாதத்தால் தணிக்கை உட்பட்டது. சமய வாதிகளும் அடிப்படை வாதிகளும் திரைக்கு வர முன்னர் வன்முறையில் இறங்கியதால் தடைசெய்யப்பட ஏதுவானதுடன் இவர் சமூக விரோதி என்றும் பொதுவாக ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டார்.

இந்தத் திரைப்படம் தணிக்கைக்கு உட்பட்டதன் பின்னரே ஹந்த கமவின் ஆளுமை விரிவாகப் பேசப்பட்டது.

இவரது படங்கள் பொதுவாக கலாசார அடிப்படை வாதிகளி னதும், மரபு வாதிகளினதும் எதிர்ப்பைப்பெற்றுக்கொண்டன. அக்சரய திரைப்படம் திரைக்கு வராதபோதும் அது சீடிக்களாக வெளிவந்திருந்தமை குறிப்பிடத் தக்கது. இறுதியாக வெளிவந்த இவரது திரைப்படம் 'விது' இத் திரைப்படம் அரசியல் தலைமை களால் பாதிக்கப்பட்ட தனிமனித ஆளுமை நிறைந்த ஒரு சிறுவன் பற்றிப் பேசினாலும் ஆழமான நடைமுறை அரசியல் பற்றி குறியீட்டுப் படிமங்களுடன் வெளிப்படுத்தி இருந்தது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியல் கலாசாரம் எதிர்கால சந்ததியினரின் இருப்பை கேள்விக்குட்படுத்துகின்ற விதம் பற்றிய ஒரு அறிவுபூர்வமான வெளிப்பாட்டைத்தந்தது விது. சிறுவர் திரைப்படம் என்ற தோரணையிலேயே விது தன்னைப் பாதுகாத்துக்கொண்டது. 2010ஃ2011 ஆகிய ஆண்டுகளில் ஊடகங் களால் அதிக கதையாடலுக்கு உட்பட்ட திரைப்படம் விது.

இவ்வாரான திரைப்படங்கள் அரசியல் வர்ணங்களால் பல சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் உட்பட்டிருந்தமை கண்கூடு.

இறுதியாக இவரது திரைப் படங்களில் பாலியல் காட்சிகள் வெள்ளிடையாகக் காட்டப் படுவதாக விமரிசனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவரது சந்த கிணர, மே மகே சந்த, தனி தட்டுவென் பியாபன்ன, அக்சரய போன்ற திரைப்படங்களில் பாலியல் காட்சிகள் வெளிப் படையாக காட்டப்பட்டுள்ளன.


சடவாத மத இறுக்கங்கள் கலந்த ஒரு சமூகத்தில் இவ்வாறான பாலியல் காட்சிகள் கேள்விக் குட்படுவதும் அது ஏற்றுக் கொள்ளப் படுவதும் இருபக்க நியாயங்களைக் கொண்டிருந்தன.

சுனாமிக்குப் பின் எழுந்த சமூக ஒற்றுமை கருத்து முன்மொழிவை, வலுவூட்டும் வண்ணம் இவரது தொலைக்காட்சி நாடகம் ஒன்று தெரன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுக்கிடையில் உள்ள இனத்துவ, அடையாளப் பிரிவுகளை ஒப்பீட்டும், அதனை களைவதற்குமான ஒரு ஊடக முயற்சியாக அமைந்தது. 2005ம் ஆண்டு இந்த தொலைக்காட்சி நாடகம் மக்களிடத்தில் பெரு வரவேற்புப் பெற்றது.
அண்மையில் ஹந்தகமயின் 'இனி அவன'; என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. இத்திரைப்படம் தமிழ் விடுதலைப் போராளி
ஒருவரின் வாழ்வைப் பேசுகின்றது

அசோக்க ஹந்தகம என்பவரை நான் முதல் முதல் அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் 2005ம் ஆண்டு சந்தித்தேன். தணிக்கைக்கு உட்பட்ட 'அக்சரய' என்ற திரைப்படம் தொடர்பாக அப்போதிருந்த விவாதங்களை ஒருங்கிணைத்த நிகழ்வு அது. அந் நிகழ்வில் என்னை கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் அசோக்க ஹந்தகமவிற்கு அறிமுகம் செய்துவைத்தார்.

அந்த அறிமுகம் அவருடனான நட்புக்கு வழிசமைத்திருந்தது.

திரு. ஹந்தகம அவர்களது ஆளுமையை இன்று சர்வதேசம் மெச்சிக் கொண்டிருக்கின்றது. அவ்வாறான ஒரு வேளையில் அவர் பற்றி பதிவுகள் ஈழத்து சினிமா வாசகர்களுக்கு சற்று ஆருதல் தரும் என்று நம்புகிறோம். அதற்கு படிகள் தனது பங்களிப்பை வழங்குகின்றது.

உங்கள் பார்வைக்கு எங்கள் கருத்து - ஆசிரியர் கருத்து: படிகள் 31


வடமத்திய மாகாண சபையின் தற்போதைய கல்வி, தகவல் தொழிநுட்ப மற்றும் கலாசார அமைச்சர் கௌரவ எஸ்.எம். பேசல ஜயரத்தன பண்டார அவர்களின் வழிகாட்டலில் அமைச்சின் செயலாளர் அவர்களின் ஏற்பாட்டில் மகாண தமிழ் சிங்கள எழுத்தாளர்களுடனானா சந்திப்பொன்று அண்மையில் மாகாண அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 எழுத்தாளர்களுடனான இச்சந்திப்பில் அநுராதபுர மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்து தமிழ் மொழி மூல எழுத்தாளர்கள் 5 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா, கெகிரா சுலைஹா, நாச்சியாதீவு பர்வீன், அநுராதபுரம் றஹ்மதுல்லாஹ், எல். வஸீம் அக்ரம் அகியோர் ஆவர்.
இச்சந்திப்பின் பிரதான நோக்கம் மாகாண சபையின் கீழ் தமிழ் சிங்கள எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து அவர்களது வெளியீடுகளுக்கு பின்புலம் ஒன்றை உருவாக்குவதாகும்.
இச்சந்திப்பில் தம்மைத் தாமே அறிமுகம் செய்து கொண்ட எழுத்தாளர்கள் தமது எழுத்துக்களை நூல் உருவில் கொண்டுவருவதற்குரிய பிரச்சினைகளை முன்வைத்ததுடன். பாடசாலை மட்டத்திலிருந்து எழுத்தாளர்கள் உருவாகுவதற்கான பொறிமுறைகள் ஏற்படுத்தப்படுவதன் அவசியங்களையும் குறிப்பிட்டனர்.
மிகவும் அறிவுபூர்வமாகாவும் எளிமையாகவும் எழுத்தாளர்களது பிரச்சினைகளை அடையாளம் கண்டு கொண்ட அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் நூலுருவாக்கங்களை நெறிப்படுத்தி அதன் அச்சகப் பிரச்சினைகளை தீரப்பதற்கான எதிர்கால திட்டங்களை முன்மொழிந்தனர்.
அதில் மாகாண கல்வி அமைச்சிற்கு கொண்டுவரப்படவுள்ள அச்சியந்திரங்கள் ஊடகா மாகாண எழுத்தளார்களின் நூற்களை அச்சிட்டு குறைந்தபட்ச உதவிகளை எழுத்தாளர்களுக்கு வழங்குவதனை கருத்திட்டமாக கொண்டுள்ளதனை குறிப்பிட்டனர்.
குறிப்பாக இதுவரை இம்மாகணத்தில் தமிழ் மொழி மூல எழுத்தாளர்களுக்குள்ள பிரச்சினைகள் பற்றியும் அவர்களது கடந்தகால செயற்பாடுகள் பற்றியும் அவர்களது சமூக நல்லினக்க எழுத்துத்துறை பங்களிப்புகள் பற்றியம் விதந்து கருத்துக்கள் முன்மொழியப்பட்டதன் காரணமாக அமைச்சர் மிக நெருக்கமான அணுகுமுறைகளை கையாண்டமை குறிப்பிடத்தக்கது
வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற இந்நிகழ்வு எழுத்தாளர்களது பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான வழிகளைத் திறக்கும் என்ற நம்பிக்கை இருப்பதுடன். பிரதேச எழுத்தாளர்கள் இந்த விடயத்தில் தீவிர செயற்பாடுகள் ஊடாக தமது இலக்குகளை அடைந்து கொள்ள துணியவேண்டும் என்றும்  படிகள் இங்கு விதந்து குறிப்பிட விளைகின்றது.

படிகள் 31 - புதிய இதழ்